மே 03,2017
திருவள்ளூர்: பகவத் ராமானுஜரின் ஆயிரமாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, திருவள்ளூர் வைத்ய வீரராகவ சுவாமி திருக்கோயிலில் 4.5.2017 முதல் 7.5.2017 வரை வித்யாசமான ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கலை, இலக்கியம், பண்பாடு என பல்சுவை நிகழ்ச்சிகளும், அறிஞர் பெருமக்கள் கலந்து கொள்ளும் விவாத சபை, கலந்துரையாடல், உபந்யாசங்களும் நடைபெற உள்ளன.
ராமானுர் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்டு ஒரு கண்காட்சியும், வைணவ இலக்கிய புத்தகக் கண்காட்சிகளும் இடம் பெறுகின்றன. தினமும் காலை 11 மணிக்குத் தொடங்கும் நிகழ்வுகள் இரவு ஒன்பது மணி வரை தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. மேலும், ராமானுஜ சம்ப்ரதாயத்தின் அடிப்படையான வைதிகம், ஆசாரம், அனுஷ்டானம் இவற்றை அறியவும் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகளின் அருளாசியுடன் வைத்ய வீரராகவ சுவாமி தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்ச்சித் தொகுப்பை ஏபிஎன் சுவாமி ( அனந்த பத்மநாபாசார்யார் சுவாமி) வழங்குகிறார். ஒரே இடத்தில் எம்பெருமான், ஆசார்யர், எம்பெருமானார் தரிசனம் என அனைத்தையும் அறிந்திட, அனுபவித்திட மாபெரும் வாய்ப்பு இது.