சபரிமலையில் முதல் நாள் வருமானம்: ரூ.3.32 கோடி

நவம்பர் 19,2019



நாகர்கோவில்:சபரிமலையில், முதல் நாள் வருமானம், 3.32 கோடி ரூபாய். கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது, இது, 50 சதவீதம் அதிகம், என, தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார்.

அவர், மேலும் கூறியதாவது: சபரிமலையில், நடப்பு மண்டல கால பூஜை அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. தரிசனம் முடிந்து பக்தர்கள் மகிழ்ச்சியாக திரும்புகின்றனர். தினமும், 40 ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுக்க, தேவசம் போர்டு தயாராக உள்ளது.தேவையான அளவு அப்பம், அரவணை இருப்பு உள்ளது. பிளாஸ்டிக் இல்லாத சபரிமலை சீசன் என்பது தான் தேவசம் போர்டின் திட்டம். எவ்வளவோ முயற்சி எடுத்தும், பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இருமுடி கட்டில், பிளாஸ்டிக் கவர்களில் பொருட்கள் கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். இதற்காக அண்டை மாநிலங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடை திறந்த முதல் நாள் வருமானம், 3.32 கோடி ரூபாய். கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது, இது, 50 சதவீதம் அதிகம். காணிக்கை, அப்பம், அரவணை என, எல்லா வகையிலும் வருமானம் அதிகரித்து உள்ளது.காணிக்கையாக மட்டும், 1 கோடியே, 10 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. அரவணை விற்பனையில், 1 கோடியே, 19 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

வண்டிபெரியாறு - -சத்திரம்பாதை திறப்பு:  சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக, வண்டிபெரியாறு - சத்திரம்- - புல்மேடு பாதை திறக்கப்பட்டது. முதல் நாளில், இந்த பாதையில், 142 பக்தர்கள் வந்தனர்.சபரிமலை வரும் பக்தர்களுக்கான பழமையான பாதைகளில் ஒன்று, வண்டிபெரியாறு -- சத்திரம்- - புல்மேடு பாதை. அடர்ந்த காடு வழியிலான இந்த பாதையில், தமிழக பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். நேற்று முன்தினம், இந்த பாதை வழியாக, 142 பக்தர்கள் சன்னிதானம் வந்தனர். காலை, 8:00 முதல், பகல், 2:00 மணி வரை மட்டுமே, பக்தர்கள் சத்திரத்தில் இருந்து அனுப்பப்படுவார்கள். புல்மேட்டில் சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. கக்கி, கவல ஆகிய இடங்களில் போலீஸ் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாபரணத்தை தரிசனம் செய்த பக்தர்கள்:  பந்தளத்தில், ஐயப்பனின் திருவாபரணத்தை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 53 நாட்களுக்கு திருவாபரணம் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருக்கும். மகரவிளக்கு நாளில், ஐயப்பனுக்கு அணிவிக்கும், திருவாபரணம் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். மண்டல சீசன் தொடங்கி விட்டால், பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகின்றனர். திருவாபரணங்களை தரிசனம் செய்துவிட்டு, இங்குள்ள சாஸ்தா கோவிலிலும் வழிபட்டு செல்கின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்