தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவிற்காக பக்தர்களின் வசதிக்காக தெப்பக்குளம் தூர் வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இளையான்குடி அருகே பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் போது மதுரை,அருப்புக்கோட்டை,விருதுநகர், சிவகங்கை,மானாமதுரை,இளையான்குடி, காரைக்குடி,திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிகாணிக்கை,தீச்சட்டி,கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா வருகிற 29ம் தேதி இரவு 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.5ந் தேதியும்,மின் அலங்கார தேர்பவனி 6 ந் தேதி இரவும் நடைபெற உள்ளது.இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.இந்நிலையில் கோயில் முன்பாக உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் மாசடைந்த நிலையில் இருந்ததையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களாக மின் மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.தற்போது அப்பணிகள் முடிவடைந்து தெப்பக்குளத்தில் இருந்த சகதிகளை மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு அகற்றி சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதனைத் தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக சுத்தமான தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், குத்தகைதாரர் அங்குச்சாமி(எ)மோகன் தலைமையில் அலுவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளார் வருகின்றனர்.