டிசம்பர் 02,2024
கூடலுார்; கன மழை காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சத்திரம் புல்மேடு வனப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக இடுக்கி மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சபரிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. டிச.5 வரை தொடர்ந்து மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வண்டிப்பெரியாறிலிருந்து சத்திரம், முக்குழி, புல்மேடு வழியாக சபரிமலைக்கு செல்லும் வனப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்ல தடைவிதித்து இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். கனமழையால் காட்டுப்பாதையில் நடந்து செல்வதில் சிரமம் உள்ளதாகவும், கடுமையான பனிமூட்டத்தால் பாதை தெரியாமல் திசை மாறி செல்லும் அபாயம் உள்ளதாகவும், வனவிலங்குகள் நடமாட்டத்தாலும் இப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் வண்டிப்பெரியாறு, எருமேலி, பம்பை வழியாக கோயிலுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று காலையில் வனப்பாதையில் நடந்து செல்வதற்காக சத்திரம் வந்த பக்தர்கள் அனைவரையும் கேரள அரசு பஸ் மூலம் பம்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.