கிரகணம் காரணமாக சபரிமலை நடை அடைப்பதாக வதந்தி; நடவடிக்கை எடுக்கப்படும் என தேவசம்போர்டு அறிவிப்பு

டிசம்பர் 24,2024



சபரிமலை; சபரிமலையில் மண்டல பூஜை நாளில் சூரிய கிரகணம் காரணமாக மூன்றரை மணி நேரம் நடை அடைப்பதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி. எஸ். பிரசாந்த் கூறினார்.


சபரிமலையில் அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: கடந்த 22 -ல் ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி பவனி 74 கோயில்களுக்கு சென்று விட்டு இன்று பம்பை வருகிறது. இங்கு கேரள தேவசம் அமைச்சர் வாசவன் இந்த பவளியை வரவேற்பார். நாளை மண்டல பூஜை நடைபெறும். இதற்காக நெய் அபிஷேகம் உள்ளிட்ட எந்த நேரமும் மாற்றப்படவில்லை. 2018 - ல் ஏற்பட்ட பெருவெள்ளம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உள்ளிட்டவற்றால் தடைபட்ட பம்பா சங்கமம் நிகழ்ச்சி 2020 ஜனவரி 12-ல் பம்பையில் நடைபெறும்.அன்றைய தினம் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் 75 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி 75 தீபங்கள் அனைத்து கோயில்களிலும் ஏற்றப்படும். 2025 மகர விளக்கு சீசனில் ஐயப்பன் படம் பொறித்த தங்க லாக்கெட் விற்பனைக்கு விடப்படும். நடப்பு சீசனில் நேற்று முன்தினம் வரை 30.87 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 4.45 லட்சம் அதிகமாகும். சபரிமலை உள்ளிட்ட கேரளாவின் முக்கிய கோயில்களில் சோலார் மின் உற்பத்தி திட்டம் உடனடியாக தொடங்கப்படும்.கேரள அரசின் நிதி உதவியுடன் நிலக்கலில் பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்களை தேவசம் அமைச்சர் வாசவன் நாளை மாலை 4:00 மணிக்கு திறந்து வைப்பார். மூன்று மாடிகளை கொண்டஒவ்வொரு கட்டிடத்திலும் சுமார் 2500 பக்தர்கள் தங்க முடியும். மண்டல பூஜை தினமான நாளை காலை 7:30 முதல் 11:00 மணி வரை சூரிய கிரகணம் காரணமாக சபரிமலை நடை அடைக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியுள்ளது. இது சபரிமலை சீசனை சீர்குலைக்கும் முயற்சியாகவே கருதப்படுகிறது. இது தொடர்பாக கேரள சைபர் கிரைம் போலீசில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்