டிசம்பர் 04,2024
சபரிமலை; வானம் தெளிந்து வெயில் அடித்ததால், சபரிமலையில் நேற்று இயல்பு நிலை திரும்பியது. புல் மேடு மற்றும் எருமேலி பாதையில் பக்தர்கள் இன்று முதல் முழுமையாக அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவ., 30 இரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சபரிமலையில் கனமழை பெய்தது. வானம் எந்த நேரமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் பனி சூழ்ந்தது. நேற்று காலை 8:00 மணி-க்கு பின் வானம் தெளிந்தது. வெயில் அடிக்க துவங்கியது. அவ்வப்போது வானில் மேகமூட்டம் காணப்பட்டாலும் மாலை வரை வெயில் அடித்ததால் பக்தர்கள் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் நடத்தி திரும்பினர். தொடர் மழையால் குமுளி,- சத்திரம்,- புல் மேடு, எருமேலி,- முக்குழி, கரிமலை பாதைகளில் பக்தர்கள் செல்ல இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஸ்வரி தற்காலிக தடை விதித்திருந்தார். நேற்று காலை முதல் மழை பெய்யாததால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை வரை அனுமதி வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, இடுக்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தரப்பில், ‘நாளைய காலநிலையை பொருத்து முடிவெடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இன்றும் மழை இல்லாமல் வெயில் அடிக்கும் பட்சத்தில், பக்தர்கள் இப்பாதைகளில் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினமும், புல் மேடு பாதையில் பயணம் செய்வதற்காக சத்திரம் வந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பம்பைக்கு அழைத்து வரப்பட்டனர். நடப்பு சீசனில் இதுபோன்று திடீர் காலநிலை மாற்றம் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண படையினர் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மழை குறித்த முன்னறிவிப்பு வந்ததும் பம்பையில் செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்து போலீஸ், தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் நிவாரண படையினர் தயாராக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.