டிசம்பர் 06,2024
சபரிமலை; பக்தர்களின் எடைக்கு ஏற்ப டோலி கட்டணத்தை நிர்ணயிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. மூன்று பிரிவுகளாக எடை நிர்ணயத்து கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தவர்கள், நோய் வாய் பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை சபரிமலைக்கு அழைத்து வர டோலி பயன்படுத்தப்படுகிறது. பிரம்பு நாற்காலியில் அமர வைத்து நான்கு பேராக தூக்கி வரப்படுவார்கள். தற்போது இதற்கு பம்பை முதல் சன்னிதானம் வரை 3250 ரூபாய் கட்டணம் உள்ளது. சென்று திரும்ப கட்டணம் 6,500 ஆகும். ஆனால் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ப்ரீபெய்டு டோலி சிஸ்டத்தை கொண்டுவர தேவசம் போர்டு முடிவு செய்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் இதற்கு தொழிலாளர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். பின்னர் அவர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர் . ப்ரீபெய்டு டோலி கொண்டு வரும் பட்சத்தில் தங்களின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து பக்தர்களின் எடைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிப்பது என்று தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. 80 கிலோ வரை 4250, 80 முதல் 100 கிலோ வரை 5250, 100 கிலோவுக்கு மேல் 6250 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 250 ரூபாய் தேவசம்போர்டுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.
சேவை தொடங்குவதற்காக சன்னிதானம் பெரிய நடை பந்தலில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். கவுண்டர் அருகிலும் நீலிமலை கார்டியாலஜி சென்டர் அருகேயும், பம்பையில் செழிக்குழி பகுதியிலும் மூன்று கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது. இந்த கவுண்டர்களில் மட்டுமில்லாமல் ஆன்லைனிலும் டோலி முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் டோலி சேவையில் ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கும். எனினும் ஏமாற்ற முடியாது என்பதால் இந்தத் திட்டத்திற்கு பக்தர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய டிக்கெட்டுகள் அச்சடித்து வந்ததும் இந்தத் திட்டம் தொடங்கும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.