டிசம்பர் 07,2024
கூடலுார்; சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சத்திரம் புல்மேடு வழியாக 18 நாட்களில் 35 ஆயிரம் பக்தர்கள் பயணம் செய்துள்ளனர்.
சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கோயிலுக்குச் செல்ல குமுளியிலிருந்து எருமேலி பம்பை வழியாக ஒரு பாதையும், வள்ளக்கடவு சத்திரம் புல்மேடு வழியாக மற்றொரு பாதையும் உள்ளது. புல்மேடு பாதை மிகக் குறைவான தூரத்தில் உள்ளதால் பக்தர்கள் தற்போது அதிகம் செல்ல துவங்கியுள்ளனர். குமுளியில் இருந்து 24 கி.மீ., துாரமுள்ள சத்திரத்திற்கு வாகனத்தில் சென்று அங்கிருந்து 12 கி.மீ., துார வனப்பாதையில் நடந்த சென்றால் கோயிலை அடைந்து விடலாம். காலை 7 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை இப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கடந்த டிச. 2, 3 தேதிகளில் மழை காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தற்போது பக்தர்கள் அதிகமாக செல்ல துவங்கியுள்ளனர். கடந்த 18 நாட்களில் 35 ஆயிரம் பக்தர்கள் பயணம் செய்துள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து செல்ல முடியாமல் தவிப்பவர்கள், காயம் அடைந்தவர்களைக் கண்காணித்து அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தற்போது புல்மேடு பாதை பக்தர்கள் நடந்து செல்வதற்கு ஏற்றதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.