ஜனவரி 04,2025
சபரிமலை; மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலையில் வனத்துறை சார்பில் எல்லா முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறினார்.
இது தொடர்பாக பம்பையில் நடைபெற்ற அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது: கேரள அரசின் அனைத்து துறைகளின் ஒத்துழைப்பால் சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலகாலம் பெரிய புகார்களுக்கு இடம் அளிக்காமல் நடந்து முடிந்தது. பாரம்பரிய பாதைகளான பெருவழி பாதையில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 534 பேரும், சத்திரம்,- புல்மேடு வழியாக 86 ஆயிரத்து 980 பேரும் சபரிமலை வந்து தரிசனம் செய்துள்ளனர். அட்டதோடு முதல் நீலிமலை வரை உள்ள திருவாபரண பாதையின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. பம்பை - நுணங்காறுக்கு இடையே தற்காலிக பாலம் அமைக்கும் பணி ஜன., 12- க்கு முன்னர் முடிவடையும். பெருவழிப் பாதையில் அழுதை கடவு, கல்லிடும் குன்று, வள்ளித்தோடு, வெள்ளாறம்செட்டை, புதுச்சேரி, கரிமலை, வலியானவட்டம் சிறியான வட்டம் ஆகிய எட்டு பக்தர் தங்குமிடங்களில் சுற்றுச்சூழல் அபிவிருத்தி கமிட்டிகள் செயல்படுகிறது. யானை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்காணிப்பதற்காக அழுதை – பம்பை, பம்பை – சன்னிதானம், சத்திரம் –- சன்னிதானம் பாதைகளில் வனத்துறையின் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோல இந்த பாதைகளில் சிசிடிவி கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பம்பை மற்றும் சன்னிதானத்தில் இருந்து 100 காட்டுப்பன்றிகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சத்திரம், உப்பு பாறை பாதையில் நேரடி கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பம்பை, சன்னிதானம், புல் மேடு ஆகிய இடங்களில் யானை தடுப்பு படையை சேர்ந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புல் மேட்டில் போலீசின் தற்காலிக வயர்லெஸ் மையம் அமைக்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. காட்டுப்பாதைகளில் பக்தர்களுக்கு உதவுவதற்காக வனத்துறை சார்பில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மகரஜோதி நாளில் புல் மேட்டில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். புல் மேட்டில் மகரஜோதி தெரியும் இடங்களில் இடுக்கி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.