ஜனவரி 02,2025
சபரிமலை; மகர விளக்கு சீசனில் பக்தர்கள் கூட்டம் காரணமாக சபரிமலை திணறுகிறது. 8 மணி நேரம் காத்திருந்து 18 படியேறும் நிலை உள்ளது. காட்டுப்பாதைகளில் வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பாஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் தினமும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மண்டல காலத்தில் இது ஓரளவுக்கு நல்ல பலனை தந்தது. நீண்ட காத்திருப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனம் நடத்தி திரும்பினர். ஆனால் மகர விளக்கு சீசனுக்காக டிச.,30 மாலை நடை திறந்த பின்னர் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக 30, 31 தேதிகளில் நிலக்கல், பம்பை போன்ற இடங்களில் பக்தர்கள் தடுத்து நிறுத்தி சில மணி நேர இடைவெளியில் அனுப்பப்பட்டனர். இதனால் 12 மணி நேரம் வரை பக்தர்கள் படி ஏற காத்திருந்தனர். இந்தக் கியூ மர கூட்டத்தையும் கடந்து சபரி பீடம் வரை காணப்பட்டது. நேற்று பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்ததால் நிலக்கல் மற்றும் பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படவில்லை. எனினும் 18 படிகளில் ஏறுவதற்கான வரிசையில் 8 மணி நேரம் வரை பக்தர்கள் நிற்கின்றனர்.
எருமேலி மற்றும் புல்மேடு காட்டுப்பாதைகளில் வரும் பக்தர்கள் மிகவும் களைப்புடன் வருவதால் 18 படிகளில் ஏற அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் இருக்க வனத்துறை சார்பில் பாஸ் வழங்கப்பட்டது. இந்தப் பாஸ் வைத்திருப்பவர்கள் மரக் கூட்டத்தில் இருந்து சந்திராங்கதன் ரோடு வழியாக சன்னிதானத்தில் 18 படிகளின் அருகே சுலபமாக செல்ல முடியும். மகர விளக்கு சீசனில் இந்த பாதை வழியாக அதிக அளவில் பக்தர்கள் வருவதால் இந்த பாஸ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதிகளவில் பக்தர்கள் வந்ததால் நெரிசல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மண்டல சீசனை விட தற்போது 18 படிகளில் பக்தர்களை ஏற்றும் வேகம் குறைந்துள்ளதும் இந்த பிரச்னைக்கு காரணமாக கூறப்படுகிறது சபரிமலை பாதுகாப்புப் பொறுப்புகளை கவனிக்கும் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் சன்னிதானத்தில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகிறார். இன்னும் ஓரிரு நாளில் நிலமை சீரடைந்து விடும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.