சென்னை; ‘மத்திய திருப்பதி’ என்று அழைக்கப்படும் பஞ்சவடி கோவில், திண்டிவனம் – புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி, ஜெயமங்கள வலம்புரி மகா கணபதி, 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாரால் ஸ்ரீனிவாச பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், தனிச் சிறப்பை பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான சொர்க்கவாசல் திறப்பு, 10ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, நாளை காலை 9:00 மணிக்கு மூலவர் ஸ்ரீவாரி வெங்கடாஜபதி சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், திருவாராதனம், சாற்றுமுறை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகுண்ட ஏகாதசியான, 10ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், கோ பூஜை நடக்கிறது. காலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் பரமபதவாசல் கடந்து, ஆழ்வார்களின் மங்களாசாசனம் கண்டு, அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி இரவு 7:00 மணிவரை அருள்பாலிக்கிறார். பக்தர்கள் அதிகாலை 5:00 மணி முதல் சொர்க்க வாசல் வழியாக அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் அறங்காவலர் கோதண்டராமன், உப தலைவர் யுவராஜன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.