கோத்தகிரி; கோத்தகிரி மாரியம்மன் கோவிலில், மண்டல பூஜை நிறைவடைந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோத்தகிரி கடைவீதியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவிலில், கடந்த நவ., 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மண்டல பூஜை நடந்தது. கோத்தகிரி பகுதியில் வசிக்கும் பல்வேறு சமுதாயத்தினர் மற்றும் தனியார் சார்பில், அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார பூஜை நடந்தது. ஆன்மீக சொற்பொழிவு பஜனை இடம்பெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்படி, நிறைவு நாளான நேற்று, 48வது நாள் மண்டல பூஜை சிறப்பாக நடந்தது. நேற்று அதிகாலை முதல், அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்கார வழிபாடு, சிறப்பு பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு மகளிர் பங்கேற்ற பால் குட ஊர்வலம் நடந்தது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டினர் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.