ஜனவரி 08,2025
சபரிமலை; ‘‘மகரஜோதி தெரியும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்,’’ என்று பத்தணந்திட்டா கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் கூறியுள்ளார். இதற்கிடையே சபரிமலை தரிசனத்திற்கான ஸ்பாட் புக்கிங் இன்று முதல் 5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பம்பையில் மகரஜோதி முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது: மகரஜோதி தெரியும் அனைத்து இடங்களிலும் உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். சுகாதாரத்துறை சார்பில் இங்கு மருத்துவ வசதிகளும், ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்படும். குடிநீர் மற்றும் கழிவறைகள் ஏற்படுத்தப்படும். குடிநீர் வாரியம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். தேவைப்படும் இடங்களில் யானை தடுப்பு படை ஊழியர்களும் நியமிக்கப்படுவர். பம்பையில் பெட்ரோல் பங்கின் மேல் பகுதியிலும், ஹில்டாப்பிலும் பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்வதற்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும். எனினும் ஹில்டாப் பார்க்கிங் கிரவுண்டின் கீழ் பகுதியில் நிற்க அனுமதி இல்லை. ஜோதி தரிசனம் முடிந்தவுடன் படிப்படியாக திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவர். பம்பை மற்றும் நிலக்கல் இடையே அட்டத்தோட்டில் இரண்டு இடங்களில் ஜோதி தரிசனம் செய்ய வசதி செய்யப்படும். இங்கும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதற்கிடையில், ‘ஸ்பாட் புக்கிங்’ எண்ணிக்கை இன்று முதல் 5,000 ஆக குறைக்கப்பட் டுள்ளது. பம்பை, எருமேலி, பந்தளம் ஆகிய மூன்று இடங்களையும் சேர்த்து மொத்தம் 5,000 பேருக்கு பாஸ் வழங்கப்படும். மகரஜோதி நாளான ஜன., 14 வரை இது அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். அதிகமாக பக்தர்கள் வந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும். திருப்பி அனுப்பப்படுவார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு தேவசம் போர்டு பதிலளிக்கவில்லை.