ஜனவரி 10,2025
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் கூறினார்.
சன்னிதானத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் இந்த ஆண்டு மகர விளக்கு சீசன் நிறைவு கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜன.11- ல் பிரசித்தி பெற்ற அம்பலப்புழா ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் எருமேலியில் நடைபெறுகிறது. ஜன.12-ல் பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படும். இது ஜன. 14 ல் சன்னிதானம் வந்தடையும். ஜன. 14 சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரமான காலை 8:45 மணிக்கு மகர சங்கரம பூஜை நடைபெறும். அன்று மாலை 6:30 மணிக்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து தீபாராதனையும் அதைத்தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மகரஜோதியும் மகர நட்சத்திரமும் காட்சி தரும். ஜன.14 முதல் ஜன.18 வரை பக்தர்கள் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசிக்கலாம்.
ஹரிவராசனம் விருது;ஜன.14 காலை 10:00 மணிக்கு பிரபல மலையாள பாடல் ஆசிரியர் கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படும். மகரஜோதி தரிசனத்திற்காக பாண்டி தாவளம் உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் தங்கி இருக்கும் பக்தர்களுக்கு அந்தப் பகுதியில் தேவசம்போர்டு சார்பில் அன்னதானம் வழங்கப்படும். பக்தர்கள் தாமாக சமையல் செய்வதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜோதி தரிசனம் முடிந்த பின்னர் பக்தர்கள் மலை இறங்குவதற்கு வசதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கேரள அரசு போக்குவரத்து கழகம் போதுமான பஸ்களை இயக்கும். ஜன.15 அதிகாலை 3:00 முதல் 6:00 மணி வரை விருச்சுவல் கியூவில் முன்பதிவு செய்த பக்தர்கள் அன்று காலை 6:00 மணிக்கு பிறகு பம்பை வந்தால் போதுமானது. அன்று 11:00 மணிக்கு பின்னர் தான் ‘ஸ்பாட் புக்கிங்’ வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.