ஜனவரி 10,2025
மானாமதுரை; சபரிமலை ஐயப்பன் சுவாமி, மேல்சாந்தியை தத்ரூபமாக மானாமதுரையைச் சேர்ந்த ஓவியர் நேரடியாக வரைந்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெரு ஓவியக் கலைஞர் கார்த்தி. இவர் பழங்கள், இலைகள், மயிலிறகு உள்ளிட்டவற்றில் சுவாமி படங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் படங்களை வரைந்து அவர்களுக்கு பரிசளிப்பது வழக்கம். இவர் ஆண்டுதோறும் சபரிமலை கோயிலுக்கு மாலை அணிந்து பயணம் மேற்கொண்டு வருகிறார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற போது சன்னிதானத்திற்கு அருகில் அமர்ந்து ஐயப்பன் சன்னிதானம், சுவாமியை வரைந்துள்ளார். இதை பார்த்த பக்தர்கள் சிலர் தங்களையும் நேரடியாக வரைந்து கொடுக்க கேட்டதை தொடர்ந்து வரைந்து கொடுத்துள்ளார். பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் கார்த்தியை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி அறைக்கு அழைத்து சென்றார். அங்கு மேல்சாந்தி எதிரே அமர்ந்து சில நிமிடங்களிலேயே அவரது உருவத்தை தத்ரூபமாக வரைந்து கொடுத்தார். ஓவியக்கலைஞருக்கு சால்வை அணிவித்து பாராட்டி மேல்சாந்தி பிரசாதம் வழங்கினார்.