திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 3.4 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம், கோவிலின் பின்புறம் உள்ள, என்.ஆர்.எஸ்., சாலை, கதவு எண். 27 ல், 3,440 ச.அடி., நிலம் உள்ளது. இதை, சுந்தரேசன் என்பவருக்கு, வணிக பயன்பாட்டிற்காக வாடகை விடப்பட்டிருந்தது. அவர் வாயிலாக ஞான பிரகாசம் என்பபவர், காலவரையறை கடந்து, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார்.
கோவில் நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவுப்படி, நேற்று காலை, ஆக்கிரமிப்பட்டிருந்த கோவில் நிலத்தை மீட்கும் பணி நடந்தது. அதன்படி, அறநிலையத்துறை சென்னை மண்டலம் உதவி கமிஷனர் சிவகுமார், ஆலயங்கள் நிலம் மீட்பு தனி தாசில்தார் திருவேங்கடம், கோவில் உதவி கமிஷனர் நற்சோணை, ஆய்வாளர் அறிவுசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். கட்டடம் முழுதும் தகர செட் அடிக்கப்பட்டு, அறிவிப்பு பேனர் ஒட்டப்பட்டது. பின், கட்டடத்திற்கு, ‘சீல்’ வைக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், திருவொற்றியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 3.4 கோடி ரூபாய் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.