திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி பெருமான் கோவிலில், பங்குனி கிருத்திகை விழா, நேற்று விமரிசையாக நடைபெற்றது. திருப்போரூர் கந்தசுவாமி பெருமாள் கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் நேற்றும், பங்குனி மாத கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று காலை 3:00 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. முருகருக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையுடனும், நிதி ஆண்டு மற்றும் மாதம் முதல் நாளுடனும் கிருத்திகை வந்ததால், சுவாமியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பக்தர்களில் பலர் காவடி எடுத்தும், வேல் குத்தியும், மொட்டை அடித்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். அதேபோல், வட்ட மண்டப தொட்டியில் உப்பு, மிளகு பிராத்தனையாக செலுத்தினர். ஆடு, சேவலை பிராத்தனையாக கோவிலுக்கு விட்டனர். சிதறு தேங்காய் உடைத்தனர். முருகர் உருவ பொம்மைகளை, உண்டியல்களில் போட்டனர். மேலும், நேற்று புதிய நிதியாண்டிற்கான கணக்கு எழுதுதல் தொடக்க நாளாக இருந்ததால் பிரார்த்தனையாக, வியாபாரிகள், கல்வி, தொழில் நிறுவத்தினர்கள் தங்கள் நோட்டுப் புத்தகம், எழுது பொருட்களை வைத்து வழிபட்டனர். மாலையில், கந்தசுவாமி பெருமான் வள்ளி – தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளிலும் திருவீதிவுலா சென்று அருள்பாலித்தார். கோவில் வளாகம், மாடவீதிகள் என, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு, பரணி உற்சவத்தில் கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில் மயில் வாகனத்தில், மாடவீதி உலா வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.