திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக சுவாமி நெல்லையப்பர் ஆயிரங்கால் மண்டபம் எழுந்துருளி பாண்டிய மன்னருக்கு செங்கோல் வழங்கும் விழா பங்குனி உத்திர திருநாள் அன்று நடைபெறும். திருவிழாவின் இரண்டாம் நாள் தொடங்கி ஒன்பதாம் நாள் வரை சுவாமி நெல்லையப்பர் கருவறையில் வைத்து பூஜை செய்யப்படும். உடையவர் மூர்த்திலிங்கம் மாலை வேலைகளில் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆண்டுக்கு 8 நாள் மட்டுமே இந்த லிங்கம் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும்.இத்தகைய பிரசித்தி பெற்ற நிகழ்வுகள் நடக்கும் இத்திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இந்த நிகழ்வுக்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடிபட்டம் கோவில் உட்பிரகாரத்தில் விதி உலாவாக கொண்டுவரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு உள்ள சின்ன தங்க கொடிமரத்தின் முன் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு திருவிழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால் மஞ்சள் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேக திரவியம் கொண்டு சிறப்பாக அபிஷேகமும் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா வரும் பத்தாம் தேதி கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடைபெறுகிறது.