மருதமலை முருகனுக்கு அர்த்த ஜாம பூஜை சர்வரோக நிவர்த்திக்கு பக்தர்கள் வழிபாடு



கோவை; மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் அர்த்த ஜாம பூஜையில் மட்டுமே நிர்மால்ய தரிசனத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். இதை தரிசிக்க தனி பக்தர்கள் கூட்டமே திரளுகிறது.


மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே மூன்று திசைகளால் மலையால் சூழப்பட்டு கிழக்கு திசையை பார்த்தவாறு மருதமலைக் கோவில் அமைந்துள்ளது. நிலப்பகுதியிலிருந்து, 500 அடி உயரத்தில் கோவில் சன்னிதானம் அமைந்துள்ளது. மருதமலையில் பக்தர்கள் படிகளின் வழியாக பயணிக்க, ஒன்றுக்கு ஒன்று அடி அளவில், 837 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயணித்தே மலைமேல் உள்ள முருகப்பெருமானை தரிசிக்க முடியும். இது தவிர மலைப்பாதையில் வாகனங்களில் சென்றும் தரிசிக்கலாம். மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகப்பெருமானுக்கென்று சிலை வடித்தார். இந்த சிலையே கருவறையில் தற்போதும் பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது.இரண்டு கரங்களுடன் காட்சியளிக்கும் முருகப்பெருமான், பழநி முருகப்பெருமானைப் போலவே, கையில் தண்டத்துடன், இடது கையை இடுப்பில் வைத்தபடி தண்டயுதபாணியாக காட்சியளிக்கிறார்.


தலைக்கு பின்புறம் சடையும், காலில் தண்டையும் அணிந்திருக்கிறார்.அன்றாடம் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்று வித அலங்காரங்களுடன் காட்சி தருகிறார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை மற்றும் தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிவிக்கப்படுகிறது. அர்த்த ஜாம பூஜையில் மட்டுமே கருவறையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை தண்டாயுதபாணியாக நிர்மால்ய தரிசனத்தில் தரிசிக்க முடியும். அப்போது இறைவனுக்கு ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவித்து எண்ணெய் காப்புடன் காட்சியளிக்கிறார். இந்த தரிசனத்தை காண்பதால் பக்தர்களின் உடலில் இருக்கும் சர்வரோகங்களும் நிவர்த்தியாகும், உடல் வலிமை பெருகும், பில்லி சூன்யம், திருஷ்டி உள்ளிட்ட கெடுபலன்கள் அகலும் அதனால் இந்த தரிசனத்தை காண பக்தர்கள் கூட்டம் திருளுகிறது. காலை 8:30 மணி முதல் 9:00 மணிக்குள் உஷக்கால பூஜையும், 9:30 மணி முதல் 10:30 மணி வரை காலசந்தி பூஜையும், காலை 11:30 மணி முதல் 12:00 மணி வரை உச்சிக்கால பூஜையும், 4:30 முதல் 5:00 மணி வரை சாயரட்சை பூஜையும், இரவு 8:00மணி முதல் 8:30 மணி வரை அர்த்தஜாம பூஜையும் நடைபெறும். இப்பூஜைகளின் போது, காலபூஜை அபிஷேகம், தங்கரத புறப்பாடு, முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அன்னை தமிழில் வழிபாடு, பால் அபிஷேகம், தங்க கவசம் அணிவித்தல், அன்னை தமிழில் அர்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அன்றாடம் நடக்கிறது. அன்றாட பூஜைகளிலும் சிறப்பு வழிபாடுகளிலும் பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்