குன்னூர்; குன்னூர் பேரட்டி கிராமத்தில், நூற்றாண்டு காலமாக, பங்குனி உத்திர திருவிழாவில், ஆண்கள் மட்டுமே, மேடு மற்றும் இறக்கத்தில் அரை கி.மீ. தூரம் அங்கப் பிரதட்சணம் வழிபாடு பரவசத்தை ஏற்படுத்தியது. முருகனுக்கு, சிறப்பு விரத தினமாக கொண்டாடப்படும் பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில், முருகன் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் மற்றும் நேர்த்திக்கடன்கள பக்தர்கள் செலுத்துகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் அருகே பேரட்டி கிராமத்தில் கடந்த நூற்றாண்டுகளாக பால முருகன் கோவிலில் நேர்த்தி கடன் செலுத்துவது பக்தி பரவசத்தை ஏற்படுத்துகிறது. வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டம் சூழ்ந்த இடத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து, படுக இன மக்கள் பாரம்பரிய வெள்ளையுடை அணிந்து வழிபாடு நடத்தினர். இதில் முதல் மொட்டையிடுதல், நடத்தப்படுகிறது. மேலும், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் காவடி எடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். முக்கிய நிகழ்வாக, விநாயகர் கோவிலில் இருந்து முருகன் கோவில் வரை அரை கி.மீ. தூரம் வரை மேடு மற்றும் இறக்கத்தில் ஆண்கள் மட்டும் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்தி கடன் செலுத்தியது அனைவரையும் பரவசப்படுத்தியது. இதில் வெள்ளை யுடையை தரையில் விரித்து அதில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம், தேர் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.