காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவில், கேது கிரகத்தின் பரிகார ஸ்தலமான கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமியன்று, சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பாண்டிற்கான திருக்கல்யாண உத்சவம் மற்றும் வீதியுலா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு, நவகலச பூஜை ஹோமமும், மாலை 6:00 மணி முதல், இரவு 8:30 மணிக்குள், திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து கர்ணகி அம்பாளுடன், திருமண கோலத்தில் எழுந்தருளிய சித்ரகுப்த சுவாமி, வீதியுலா வந்தார். இன்று, காலை 5:30 மணி முதல், இரவு 10:00 மணி வரை சித்ரா பவுர்ணமி தரிசனம் நடக்கிறது.