திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவில் அருகே, தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. வழக்கமாக, தெற்கு முகம் நோக்கி இருக்க வேண்டியவர், வடக்கு முகமாக நோக்கி எழுந்தருளியிருப்பதால், இக்கோவிலை வடகுருஸ்தலம் என்பர். யோக தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் குருபகவானை வணங்கி வழிபடுவதால், கல்வி, வேலைவாய்ப்பு, குடும்ப ஒற்றுமை, பண வரவு, மன நிம்மதி, பதவி, குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நிலையில், இன்று குருபெயர்ச்சியையொட்டி, இக்கோவிலில் சிறப்பு யாகம், பூஜை மற்றும் வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலை மற்றும் மாலையில் லட்சார்ச்சனை நடந்தது. இன்று முற்பகல் 11:00 மணி முதல், குருபகவான் வேள்வி துவங்கியது. பிரமாண்ட கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, கணபதி ஹோமம், குருபெயர்ச்சி பரிகார ஹோமம், விசேஷ அபிஷேகம் நடந்தது. உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில், ஏராளமான பக்தர்கள், பரிகார பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.