தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பழனி பட்டாலியன் எஸ்.பி., பாண்டியராஜன், ஆகமவிதிகளை மீறி, சுவாமி தரிசனம் செய்ததாக, பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாகவும், பல்வேறு பெருமைகளை கொண்ட கோவிலாகவும், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இதனால் இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் என, பல பிரபலங்களும் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், கொளத்தூர் துணை கமிஷனராக இருந்த பாண்டியராஜன், கடந்த வாரம், பழனி பட்டாலியன் எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், எஸ்.பி., பாண்டியராஜன், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் வரும்பொழுது, கோவில் நடை அடைக்க, கோவில் பணியாளர்கள் தயாராகி வந்தனர். இதன்பின், எஸ்.பி., பாண்டியராஜன், பட்டீஸ்வரர் சன்னதிக்கு வந்தார். அங்கு, மூலவர் சன்னதியில் திரையிடப்பட்டிருந்தது. அப்போது, கோவில் அர்ச்சகர், நடை அடைக்க உள்ளதால், திரையிடப்பட்டிருப்பதாகவும், திரையை விலக்க முடியாது என, கூறியுள்ளார். அதற்கு, எஸ்.பி., பாண்டியராஜன், விபூதி பிரசாதம் மட்டும் கொடுத்தால் போதும் என கூறியுள்ளார். இதனையடுத்து, திரையை விலக்காமல், விபூதி கொடுத்துள்ளனர். அப்போது, மூலவர் சன்னதியில், வேறு பக்தர்கள் யாருமில்லை. எஸ்.பி., பாண்டியராஜனிடமும், அவருடன் வந்த கோவில் பணியாளரிடம், அங்கிருந்த பக்தர் ஒருவர், நீங்கள் யார், ஆகம விதிகளை மீறி சுவாமி தரிசனம் செய்கின்றீர்கள் என, மொபைல்போனில் வீடியோ எடுத்தவாறு, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், ஆகம விதி மீறி வி.ஐ.பி., சுவாமி தரிசனம் செய்ததாக, இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலாவிடம் கேட்டபோது,"கோவிலில், வழக்காமாக, இரவு, 9:00 மணிக்கு, பள்ளியறை பூஜை நடந்தபின்பே, நடை அடைக்கப்படும். எஸ்.பி., பாண்டியராஜன், 8:51 மணிக்கு வந்தார். அப்போது, மூலவர் சன்னதியில் திரையிடப்பட்டிருந்ததால், விபூதி மட்டும் வழங்கப்பட்டது. திரையை விலக்கவோ, தீபாராதனை காட்டவோ செய்யப்படவில்லை. ஆகமவிதி மீறப்படவில்லை,"என்றார்.