காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் சிவன காரேஸ்வரா கோவில்



கர்நாடகா ஆன்மிக தலங்களுக்கு பெயர் பெற்ற மாநிலமாக உள்ளது. இங்கு பல ஆயிரம் ஆண்டுகளான பழமையான ஏராளமான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் இன்னமும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.


பெரும்பாலான கோவில்கள் பக்தர்களுக்கு தெரிந்திருந்தாலும், அதிகம் அறியப்படாத வரலாற்று சிறப்புமிக்க கோவில்களும் இங்கு உள்ளன. இதில் ஒன்று சிவன காரேஸ்வரா கோவில். 1,000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுரா தாலுகா, முக்கூர் கிராமத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலை வீர பத்ரேஸ்வர சுவாமி கோவில் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.


கோவிலில் பசுவின் சிலை உள்ளது. உண்மையான பசு தன்னை தானே சிலையாக மாற்றிக் கொண்டது என்றும் நம்பப்படுகிறது. பொதுவாக கோவில்களில் சிவன் சிலை எதிரில் ஒரே ஒரு நந்தி தான் இருக்கும். ஆனால் இந்தக் கோவிலில் மட்டும் இரண்டு நந்திகள் உள்ளன. இது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. கோவில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே நடை திறந்திருக்கும். வார இறுதி நாட்களில் மட்டும் மதியம் 1:00 மணி வரை நடை திறந்திருக்கும்.


கனகபுரா நகரில் இருந்து கோவில் வரை செல்லும் சாலை இருபுறமும், அடர்ந்த வனப்பகுதியாக இருக்கும். வாய்ப்பு இருந்தால் வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வதை பார்க்க முடியும். கோவிலின் அருகில் சிறிய ஆறும் ஓடுகிறது. சாமி தரிசனம் முடிந்த பின் அங்கு சென்று குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம். பெங்களூரில் இருந்து கோவில் 92 கி.மீ., துாரத்திலும், மைசூரில் இருந்து 109 கி.மீ., துாரத்திலும் அமைந்துள்ளது. கோவில் முன் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது.


இந்த கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பின் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள சிவகிரி சிவன் கோவிலுக்கும் செல்லலாம். இந்த கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. அங்கு சிவன், விநாயகர், வெங்கடேஸ்வரா உள்ளிட்ட கடவுள்களுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இந்தக் கோவிலும் வனப்பகுதிக்குள் இருப்பதால் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற இடமாக இருக்கும். 


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்