ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆவணி மாதம் சதுர்த்தசியையொட்டி சிவகாமி அம்மாள் உடனுறை நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் இன்று நடந்தது.
ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு நடத்தும் தேன் அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. இக்கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் சிவகாமி அம்மாள் உடனுறை நடராஜருக்கு, மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதிநாட்கள் என ஓராண்டிற்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, ஆவணி மாதம், அவிட்ட நட்சத்திரம், சதுர்த்தசி தினமான இன்று நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் நடராஜர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், கரும்புச்சாறு, இளநீர் உட்பட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நடராஜர் சுவாமி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்திருந்தனர். கோவில் எழுத்தர் விமல் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.