நவம்பர் 19,2025
சபரிமலை; சபரிமலையில் தற்போது கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி வருகிறது. 8 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நேற்று முன் தினம் காலை துவங்கியது. இதற்காக நவ.,16 மாலை நடை திறந்தது முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங்கில் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு துவங்கிய சில நாட்களிலேயே நவ., மாதத்தின் அனைத்து நாட்களிலும் முன்பதிவு நிறைவு பெற்றது. தற்போது டிச.,10 வரையிலும் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. கார்த்திகை 1ம் தேதியான நேற்று முன்தினமே, பம்பையிலும், சன்னிதானத்திலும் கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய திட்டமிடல்கள் இல்லாததால், எருமேலியில் இருந்து சென்ற பக்தர்கள் சன்னிதானம் வர முடியாமல், பாதி வழியில் நிறுத்தப்பட்டனர். மண்டல பூஜையை முன்னிட்டு வரலாறு காணாத அளவில் பக்தர்கள் குவிந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது, இதனால் பக்தர் ஒருவர் உயிரிழந்ததும், மூதாட்டி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், இது போன்ற பல சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த நெரிசலை சமாளிக்க, பாதுகாப்புப் பணியில் உள்ள காவல்துறையினர் மற்றும் தேவஸ்தான நிர்வாகம் திணறி வருகின்றனர்.
தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவதால், கோயில் வளாகம் முழுவதும் கடும் கூட்டம் காணப்படுகிறது.