ஜனவரி 02,2026
திருவனந்தபுரம்: கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில், மீட்கப்பட்ட தங்கத்தின் அளவை விட கூடுதலாக தங்கம் திருடப்பட்டிருக்கலாம் என, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர்.
கடந்த, 1998ல், கோவில் மேற்கூரை, கருவறை கதவுகள் மற்றும் கருவறை முன் உள்ள துவார பாலகர் சிலைகளுக்கு தங்கக் கவசங்கள் அணிவிக்க, தொழிலதிபர் விஜய் மல்லையா, 30.3 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். இதை வைத்து, சுவாமி அய்யப்பன் கொலுவீற்றிருக்கும் சன்னிதானத்தின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டது. கருவறை கதவுகள், துவார பாலகர் சிலைகளுக்கும் தங்கக் கவசங்கள் அணிவிக்கப்பட்டன.
10 பேர் கைது: கடந்த, 2019ல், துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்கக் கவசங்கள் கழற்றப்பட்டு, தங்க முலாம் உள்ளிட்ட செப்பனிடும் பணிகளுக்காக, கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், சென்னையில் உள்ள, ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு தங்கக் கவசங்களை எடுத்து வந்து செப்பனிடும் பணிகளை மேற்கொண்டார். பணிகள் முடிந்ததும், கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு வசம் தங்கக் கவசங்கள் ஒப்படைத்த போது, 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தங்கம் மாயமானது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டது. துவார பாலகர் சிலைகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக ஒரு வழக்கும், கோவில் கருவறையில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக மற்றொரு வழக்கும் என, இரு வழக்குகளை பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டது. இதில், முக்கிய குற்றவாளியான, உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். மேலும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கள் உட்பட இவ்வழக்கில் இதுவரை, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.