சபரிமலையில் மண்டல பூஜை: சரண கோஷத்துடன் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

டிசம்பர் 27,2025



சபரிமலை: சபரிமலையில் இன்று மண்டல பூஜை நடைபெற்றது. தங்க அங்கி அணிந்து அருள்பாலித்த ஐயப்பனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படுகிறது.


கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள் சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும். கடந்த நவ. 16-ல் தொடங்கிய மண்டல காலம் இன்று இரவு நிறைவு பெறுகிறது. இன்று மதியம் நடைபெறும் மண்டல பூஜையின் போது ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்க மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா காணிக்கையாக வழங்கிய தங்க அங்கி கடந்த 23 -ல் ஆரன்முளாவில் இருந்து பவனியாக புறப்பட்டது. நேற்று மதியம் பம்பை வந்த இந்த பவனியை தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கணபதி கோயில் முன்பு வைக்கப்பட்டிருந்த அங்கியை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். மாலை 3:00 மணிக்கு பேடகத்தில் அடைக்கப்பட்டு தலைசுமடாக கொண்டுவரப்பட்டது. இது 5:30 மணிக்கு சரங்குத்தி வந்தது.


மாலை 5:00 மணிக்கு சபரிமலை நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு , அங்கியை வரவேற்கச் செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மாலை அணிவித்து வழியனுப்பி வைத்தார். இவர்கள் சரங்குத்தி சென்று அங்கியை வரவேற்று அழைத்து வந்தனர். மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ கோயில் முன் வந்த அங்கியை தந்திரி மற்றும் மேல் சாந்தி ஆகியோர் பெற்று நடை அடைத்து ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்தனர். பின்னர் 6:40 -க்கு நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அங்கி அணிவிக்கப்பட்ட ஐயப்பனை வணங்கினர். 


மண்டல பூஜை: இன்று அதிகாலை நடை திறந்து நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. பூஜைகளுக்கு பின்னர் காலை 10:10 முதல் 11:30 மணிக்குள் தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடைபெற்றது. தங்க அங்கி அணிந்து அருள்பாலித்த ஐயப்பனை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர். தொடர்ந்து ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மாலை 3:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகளுக்கு பின்னர் இரவு 11:00 மணிக்கு அடைக்கப்படும். அதன்பின்னர் மகர விளக்கு காலத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கும். மகர விளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கும். ஜன., 14-ல் மகரஜோதி விழா நடைபெறுகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்