தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், விரபத்திர சுவாமி கோவிலில், ஜூன், 26ல் கும்பாபிஷேக திருப்பணியின் போது கண்டெடுக்கப்பட்ட, கண்ணப்பநாயனாரின் இரண்டு அடி உயர கற்சிலை, கோவில் பிரகாரத்தில், யாரும் கண்டுக்கொள்ளாதநிலையில், வைக்கப்பட்டு இருந்தது.
இந்த சிலை குறித்து, ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கூறியதாவது: வேடரான கண்ணப்ப நாயனார், சிவபெருமானின் கண்களில் இருந்து ரத்தம் வழிவதை பார்த்து, சிவபக்தியின் மேலீட்டால், தன் கண்ணையே பெயர்த்து வைத்தவர். இடது கரத்தை மேலே துாக்கி, அம்பு கொண்டு கண்ணை பெயர்த்து, சிவபெருமானுக்கு சாற்றுவதற்காக, வலது கையில் வைத்திருக்கும் காட்சியாக, இங்கு கண்டெடுக்கப்பட்ட சிலை உள்ளது. இந்த சிலையின் காதில் குண்டலங்கள், இடுப்பில் குறுவாள் என நுட்பமான, பிற்கால சோழர்களின் வேலைப்பாடுகள் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.