காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பராமரிப்பின்றி பாசி படிந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைத்து, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தின் புளோமீட்டர் குழாய்களில், பச்சை நிறத்திலான பாசி மற்றும் படிமங்கள் அதிகளவில் தேங்கியுள்ளன. இயந்திரத்தின் இத்தகைய மோசமான நிலை, நீர் சுத்திகரிப்பின் தரத்தைப் பெரிதும் கேள்விக்குள்ளாக்குவதுடன், பக்தர்களின் உடல்நலத்திற்கு அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது. நீண்ட நாட்களாகச் சரி செய்யப்படாமல் இருக்கும் இந்த இயந்திரத்திலுள்ள படிமங்கள், தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல் மாசுபடுவதற்கு வழி வகுக்கின்றன. எனவே, கோவில் நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைச் சுத்தப்படுத்தி, பக்தர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.