பாகூர்: சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், பத்து நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
பாகூர் அடுத்த சேலியமேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா இன்று துவங்கியது. இதனை முன்னிட்டு, காலை 5:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு, 9:00 மணிக்கு கரகம் வீதியுலா நடந்தது. மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 6.00 மணிக்கு கும்பம் கொட்டி அம்மனுக்கு மகா தீபாராதானை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவையொட்டி, தினமும், காமதேனு, சிங்கம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேர் திருவிழா வரும் 31ம் தேதி மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன், விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.