திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜை, 06:45 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 11:30 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் திருக்கல்யாண வைபவம் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. மூலவர் உலகளந்த பெருமாள் கல்பதித்த சங்கு சக்கரம், கர்ண பத்திரம், காசு மாலை, மாங்காய் மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடாகி மூலஸ்தானத்தில் எழுந்தருளுகிறார். ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.