திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது.
திருத்தணி அடுத்த மத்துார் கிராமத்தில், முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி விழா, கடந்த 11ம் தேதி தொடங்கியது. ஆண்டுதோறும் 15 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும் இவ்விழாவில், தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் கொலு பொம்மைகளுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகளும் நடந்து வருகின்றன. நேற்று, கோவில் வளாகத்தில், சிங்க வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். அம்மனுக்கு அருகில் கொலு பொம்மைகள் வைத்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பவுர்ணமி நாளான நாளை மாலையில், 1,008 சங்காபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். அத்துடன், நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.