புதுச்சேரிக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையேயான பந்தம் பாஸ்போர்ட், நாடு, எல்லைகளையும் தாண்டிய, தொப்புள்கொடி உறவு. கடல்தாண்டி ஐரோப்பிய மண்ணில் குடியேறினாலும், அங்கிருக்கும் தமிழர்களின் நெஞ்சுக்குள் எப்போதுமே நம் ஊர் மணமும், குலதெய்வ வழிபாடும் தான் ஜீவநாடியாகத் துடித்துக்கொண்டிருக்கிறது.
பிரான்ஸ் வாழ் இந்து சமூகத்தினரின் நீண்ட நாள் கனவான அங்கே ஒரு பெருமாள் கோவிலை உருவாக்கும் உன்னதப் பணியை ‘ஸ்ரீ வெங்கடேவரா டெம்பிள் பிரான்ஸ்’ அமைப்பு முன்னெடுத்துள்ளது.
அதற்கு முன்னோட்டமாக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபோகம் மிகப்பிரம்மாண்டமாகவும் பக்திப் பெருக்குடனும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் இருந்து பிரத்யேகமாக வருகை தந்த அர்ச்சகர்கள், கடந்த நான்கு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களின் மனதை உருக்கும் வகையில் திருக்கல்யாண வைபோகத்தை ஆகம விதிகளின்படி மிகச் சிறப்பாக நடத்தி வைத்தனர்.
மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க, மலர் மாலைகள் மாற்றப்பட... பாரீஸ் மாநகரமே ஒரு கணத்திற்கு திருப்பதியாக மாறியது.
பாரீஸ் நகரில் தற்போது நிலவிவரும் சவாலான மற்றும் பதற்றமான சூழலையும் பொருட்படுத்தாமல், பிரான்ஸ் வாழ் தமிழர்கள் குறிப்பாக, புதுச்சேரியை சேர்ந்தவர்கள், இந்தியாவின் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 1500க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் திரளாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் புதிதாகத் திருமணமான தம்பதிகள் சிறப்பு முறையில் தரிசனம் செய்வதற்கான பிரத்யேக ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் கச்சிதமாகச் செய்திருந்தனர்.
தமிழகம், புதுச்சேரியில் இருந்து கடல் கடந்து வந்த பிறகு, நமது பாரம்பரிய பண்பாடுகளை நாங்கள் ஒருபோதும் மறக்கவில்லை. ஆனாலும், திருப்பதி சென்று திருக்கல்யாணத்தை நேரில் காணும் வாய்ப்பு பலருக்கு அமைவதில்லை.
அதனால்தான், அயல்நாட்டிலும் நமது கலாசாரத்தை நிலைநிறுத்தும் முயற்சியாக இந்தத் திருக்கல்யாணத்தை நடத்தினோம். இந்தச் சவாலான சூழலிலும் விழா இவ்வளவு வெற்றிகரமாக நடந்தது எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அந்த அமைப்பின் தலைவர் கண்ணபிரான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கண்ணபிரான் புதுச்சேரியை சேர்ந்த மண்ணின் மைந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணை விட்டுத் துாரமாக இருக்கலாம்; ஆனால், மனதை விட்டு எப்போதாவது விலகுமா நமது பாரம்பரியம்..