வைகாசி வளர்பிறை தசமியில் திருக்கல்யாணம், ஆவணி வளர்பிறை துவிதியையில் ஜயந்தி உத்ஸவமும், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி ஆகியவையும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
கருவறையில் மிகவும் புதுமையான தோற்றத்தில் அடியில் பிரம்மாவாகவும், நடுவில் சிவனாகவும், உச்சியில் விஷ்ணுவாகவும் காட்சியளிக்கும் சத்யதேவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி போல் அழகிய மீசையுடன் தோற்றமளிக்கிறார். இடதுபுறம் சத்யதேவியும், வலதுபுறம் லிங்க ரூபமாக பாணத்தில் முக அமைப்புடன் கூடிய கவசத்துடன் கயிலாசநாதரும் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 3.30 மணி முதல் இரவு 9.15 மணி வரை திறந்திருக்கும்.
சித்ரா பவுர்ணமி அல்லது ஆவணி மாத பவுர்ணமியில் சத்யநாராயண விரத பூஜையும் விரதமும் மேற்கொள்வதென்பது தொன்றுதொட்டு நடைபெறுகிற ஒரு வழிபாடாகும். ஆந்திர மாநில இந்துக் குடும்பங்களில் சத்யநாராயண பூஜை, ஒரு கட்டாயச் சடங்காகவே உள்ளது. திருமணமான அந்த வருடமே அன்னாவரத்தில் எழுந்தருளியிருக்கும் வீர வெங்கட சத்யநாராயண சுவாமியைத் தரிசித்து, புதுமணத் தம்பதிகள் கோயில் வளாகத்திலேயே சத்யநாராயண பூஜையைச் செய்து விரதமும் அனுசரிக்க வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் தங்கள் இல்லங்களில் பூஜையைச் செய்யலாம். காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவும், அழிக்கும் கடவுளான சிவபெருமானும், படைக்கும் கடவுளான பிரம்மாவும் ஒரே உருவாக ஸ்தாணுமாலயனாக சுசீந்திரத்தில் காட்சி தருகிறார்கள். லிங்க ரூபமாக கயிலைநாதனும், சத்யதேவராக மகாவிஷ்ணுவும், அனந்த லட்சுமியாக மகாலட்சுமியும், கருவறையில் ஒரே பீடத்தில் காட்சிதரும் அற்புத ஆலயமாக அன்னாவரம் திருக்கோயில் திகழ்கிறது. கோயில், ஒரு பெரிய தேர் போன்ற அமைப்புடன் விளங்குகிறது. நான்குபுறமும் அழகான பெரிய சக்கரங்கள். நுழைந்ததும் உயர்ந்த கொடிமரம், அருகில் பெரிய தூண், அதில் கருவறையில் உள்ளதைப் போலவே அர்ச்சாவதாரங்கள் வடிக்கப்பட்டுள்ளன. உயரமான கருவறையாதலால், மூலவர் தரிசனம் வெகு தூரத்திலிருந்தும் தெரிகிறது. தமிழ்நாட்டு பாணியில் கோபுரம். கோயிலின் முன்பகுதியில் பெரியதொரு கல்யாண மண்டபம். இது நவீன கட்டடக்கலை அமைப்புடன் விளங்குகிறது. ராமருக்கும் வன துர்கைக்கும் தனிச் சன்னதிகள். பிராகாரத்தைச் சுற்றி வரும்போது சத்யநாராயண விரதம் செய்யும் சிறுசிறு ஹோம குண்டங்கள் நிறையக் காணப்படுகின்றன. சுமார் 1,500 பக்தர்கள் ஒரே நேரத்தில் விரதம் மேற்கொள்ள முடியும். தமிழ்நாட்டில் கலச பூஜையாகச் செய்யப்படும் இந்த பூஜையை, இந்தக் கோயிலில் ஹோமத்துடன் சேர்த்துச் செய்கிறார்கள். நிறைய தம்பதிகள் சத்யநாராயண விரதம் மேற்கொள்கிறார்கள். தம்பதிகள் நேரில் வந்து கலந்துகொள்ள முடியாவிட்டால், பூஜைக்குரிய கட்டணத்தை அனுப்பி வைத்தால், அர்ச்சகர்களே பூஜை செய்து பிரசாதமும் அனுப்பி விடுகிறார்கள். விரத பூஜை செய்யும் இடத்தை சாணத்தால் மெழுகி, பின் சுத்தமான புதுத் துணியை விரித்து நான்கு மூலையிலும் மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரிக்கிறார்கள். பின்னர் அரிசியைப் பரப்பி, வெள்ளி அல்லது மண் கலசத்தில் மாவிலை அல்லது வெற்றிலை வைத்து, அதன்மேல் ஒரு புதுத் துணியில் சத்யநாராயண சுவாமியின் பிரதிமையை வைத்து, சுவாமியை அந்தப் பிரதிமையில் ஆவாஹனம் செய்கிறார்கள். விநாயகர், லட்சுமி, பார்வதி, சிவபெருமான், நவக்கிரகங்கள், அஷ்டதிக் பாலர்கள் ஆகியோருக்கும் பூஜைகள் நடத்தப்பட்டு, சத்யதேவருக்கு அபிஷேக ஆராதனைகள் தொடர்கின்றன.
பழம், பசும்பால், ரவை அல்லது கோதுமை ரவை, வெல்லம் சேர்த்து தயாரிக்கப்பட்ட கேசரி நைவேத்யம் செய்யப்படுகிறது. பூஜை நிறைவில் சத்யநாராயண விரதம் தொடர்பான கதைகளும் விரதப் பலன்களும் பாராயணம் செய்யப்படுகின்றன. பூஜையில் கலந்து கொண்டவர்களாகட்டும், கலந்துகொள்ளாமல் பார்த்தவர்களாகட்டும்... அனைவருமே சுவாமி பிரசாதத்தை அலட்சியம் செய்யாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இந்த பூஜை முறையில் மிக முக்கியமான ஒன்றாகும். அனைவருக்குமே தன் அருள் பரிபூரணமாகச் சென்றடைய விரும்புகிறார் சத்யதேவர். கோயிலில், விரத பூஜை காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. ஆந்திராவில் சத்யநாராயண விரதம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு தம்பதியும் தனது வீட்டில் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும். கருவறையில் மிகவும் புதுமையான அர்ச்சாவதார மூர்த்திகள். சிலாரூபம் சுமார் 10 அடி இருக்கும். அடியில் பிரம்மாவாகவும், நடுவில் சிவனாகவும், உச்சியில் விஷ்ணுவாகவும் காட்சியளிக்கும் சத்யதேவர் என்ற சத்யநாராயண மூர்த்தி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி போல் அழகிய மீசையுடன் தோற்றமளிக்கிறார். தன வீரம், தயா வீரம், தர்ம வீரம், யுத்த வீரம் ஆகியவை அடங்கிய வீர ரச ஸ்வரூபமாக விளங்குகிறார் பெருமாள். இடதுபுறம் அனந்தலக்ஷ்மி எனப்படும் மதநாந்த லக்ஷ்மி சத்யதேவி. வலதுபுறம் லிங்க ரூபமாக பாணத்தில் முக அமைப்புடன் கூடிய கவசத்துடன் கயிலாசநாதர். உத்ஸவ காலங்களில் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுக் காட்சி தருகின்றனர். இரண்டு தளங்களாக அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலின் அடித்தளத்தில் மத்திரிபாத் விபூதி வைகுண்ட மஹா நாராயண யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது தன ஜன ஆகர்ஷன யந்திரம். செல்வமும், ஆள் பலமும் கூடிவரும் யந்திரம். அதன்மேல் விஷ்ணு பஞ்சாயுத யந்திரம். இந்த பீடத்தின் மேல்தான் அடுத்த தளத்தில் சத்யதேவர் அருள்பாலிக்கிறார். அடித்தளத்தில் யந்திரத்துக்கு நாற்புறமும் விநாயகர், சூரியநாராயணர், பால திரிபுரி சுந்தரி மற்றும் மகேஸ்வரர் சன்னதிகள். அருகில் ராமர் சன்னதி. தானாக உருவான இந்த அர்ச்சாவதாரத்தைக் கண்டறிந்தவர் ஸ்ரீராமர்தான் என்கிறது தல புராணம்.
தல வரலாறு:
இந்தப் புகழ்பெற்ற கோயில் ரத்னகிரி மலையின் அடிவாரத்தில் உள்ளது. மேருவின் மகனான ரத்னாகர் தவமிருந்து தன் இடத்தில் இந்தக் கோயிலை அமைத்தார் என்று தல புராணம் கூறுகிறது. ரத்னகிரி மலை, கடல் மட்டத்திலிருந்து 300 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள பணக்காரர்கள் எப்போதும் அன்னதானம் அளித்துக்கொண்டே இருப்பதால் இவ்வூர் அன்னாவரம் என்ற பெயர் பெற்றது. இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. இங்குள்ள சத்யதேவர், கேட்கும் வரத்தை (அனின வரதம்) தருவதால் இவ்வாறு அழைக்கின்றனர். ராஜா ராமாராயணம் என்கிற மன்னரின் கனவில் இறைவன் தோன்றி ஆணையிட்டதற்கிணங்கி, ஒரு ஆவணி மாத வளர்பிறை துவிதியையில் இந்த இடத்தில் கோயிலை ஏற்படுத்தினார் மன்னர். சத்ய நாராயண பூஜை எப்படி வந்தது? பூவுலகில் மனிதர்கள் படும் கஷ்டங்களைப் பார்த்து மனம் நொந்த நாரதர் மகாவிஷ்ணுவிடம், அவர்கள் கடைத்தேறும்படியான ஒரு வழியைக் கூற வேண்டும் என முறையிடுகிறார். மக்கள் கடைத்தேற சத்யநாராயண பூஜையும் விரதமும் மேற்கொண்டாலே போதும் எனக் கூறும் மகாவிஷ்ணு, நானே ஹரிஹர பிரும்மரூபமாக அன்னாவரத்தில் சத்யநாராயணராக விளங்குகிறேன் என்றார். ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்படும் ஒரு கதை சுவாரஸ்யமானது. சதாவு, லீலாவதி என்ற வணிகர் குலத் தம்பதி தங்களுக்குக் குழந்தை பிறந்தால் சத்யநாராயணருக்கு விரதம் இருக்கிறோம் என வேண்டிக் கொண்டனர். சத்யநாராயணரின் அருளால் கலாவதி பிறந்தாள். குழந்தை பிறந்தால் விரதத்தை மேற்கொள்கிறேன் என்பதை மனைவி கணவனுக்கு எடுத்துரைத்தும், அவளுக்குத் திருமணம் நடைபெற்றதும் செய்யலாம் என்றான். சத்யநாராயணரின் அருளால் ரத்னாகர் என்பவருடன் அவளுக்குத் திருமணம் நடந்தது. இதன்பின்னரும் தந்தை பூஜையை மேற்கொள்ளாததால், சதாவுக்கும் அவனது மருமகனுக்கும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதுடன், அரச பழி, சிறைவாசம் என்று இன்னல்கள் தொடர்ந்தன. லீலாவதியும், கலாவதியும் பிச்சை எடுத்தனர். ஒரு வீட்டில் சத்யநாராயண பூஜையைக் கண்ணுற்று பிரசாதம் பெற்றனர். லீலாவதிக்கு ஞாபகம் வந்தது. பின் அந்த ஏழ்மை நிலையிலும் எளிமையாக விரதத்தைச் செய்ததால், இழந்த செல்வங்கள் திரும்பக் கிடைத்தன. இறுதியில் ரத்னாகர், குன்றாக மாறி தன்னில் சத்யதேவரை ஸ்தாபித்தான். கலாவதி பம்பா நதியாக மாறி எப்போதும் இறைவனை வலம் வருகிறாள் என்கின்றனர். சதாவுக்கு, கோயிலின் உட்புறம் சிலை இருக்கிறது.
ஆவணி மாத வளர்பிறை துவிதியை திதியில், மக நட்சத்திரம் கூடிய ஒரு சுப தினத்தில், புதன்கிழமையன்று பெருமாள் அன்னாவரத்தில் அங்குடு மரத்தின் அடியில் காட்சியளித்தார். அந்த மரம் நேரில்லம்மா என்ற கிராம தேவதையாக மாறியது. இன்றும் இந்த மரம் ஸ்தல விருட்சமாக, பிரம்மா, விஷ்ணு, சிவசக்தி ஸ்வரூபமாக வணங்கப்படுகிறது. மரத்தைச் சுற்றி தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றுகிறார்கள். இந்தக் கோயிலை ஒருமுறை தரிசித்தால் 108 முறை திருப்பதி சென்று வந்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கருவறையில் மிகவும் புதுமையான தோற்றத்தில் அடியில் பிரம்மாவாகவும், நடுவில் சிவனாகவும், உச்சியில் விஷ்ணுவாகவும் காட்சியளிக்கும் சத்யதேவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி போல் அழகிய மீசையுடன் தோற்றமளிக்கிறார். இடதுபுறம் சத்யதேவியும், வலதுபுறம் லிங்க ரூபமாக பாணத்தில் முக அமைப்புடன் கூடிய கவசத்துடன் கயிலாசநாதரும் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.
இருப்பிடம் : கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் தலைநகரான காக்கிநாடாவிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அன்னாவரம் உள்ளது. விஜயவாடா - விசாகப்பட்டினம் ரயில் பாதையிலுள்ள அன்னாவரம் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. விசாகப்பட்டினம் அல்லது ராஜமுந்திரி விமான நிலையத்திலிருந்து 3 மணி நேரம் பயணித்தும் இந்தக் கோயிலை அடையலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
அன்னாவரம்
அருகிலுள்ள விமான நிலையம் :
விசாகப்பட்டினம்
தங்கும் வசதி :
காக்கிநாடாவில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.