Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகரை கரைப்பது ஏன்? விநாயகரை கரைப்பது ஏன்?
முதல் பக்கம் » விநாயகர் சதுர்த்தி வழிபாடு!
சதுர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 செப்
2012
02:09

விநாயகர் சதுர்த்தியன்று பூஜை செய்ய நல்ல நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை.

கணபதியின் பிறப்பு: ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின்தொடர்ந்தார். அந்த வேளையில் இருவருக்கும் இடையே யானை வடிவில் ஒரு சக்தி வெளிப்பட்டது. தெய்வ நல்வடிவுடன் கூடிய அக்குழந்தையை சிவசக்தியர் அணைத்து மகிழ்ந்தனர். அவரைக் கணங்களின் அதிபதியாக்கி கணபதி என்று பெயர் சூட்டினார் சிவபெருமான். கணபதியைத் தம் மீது அமர்த்திப் பட்டாபிஷேகம் செய்தார். அக்கோலம் ஆனைமுகற்கு அருளிய அண்ணல் என்று கொண்டாடப்படுகிறது. அதனால் சிவனை கஜ அனுக்கிரகர் என்றும், விக்னேசப் பிரசாதர் எனவும் அழைப்பர். சிவன் ஆண் யானையாகவும், அம்பிகை பெண் யானையாகவும் இருக்க விநாயகரான கணபதி தோன்றினார் என்பதை திருஞான சம்பந்தர் பின்வருமாறு அருளிச் செய்துள்ளார்:

பிடியதன் உருவுமை கொள மிகு கரியது,
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே!

விநாயகர் அவதாரம்: விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள். அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும். நீயே யாவருக்கும் தலைவன். எனவே விநாயகன் என்றார். விக்னத்தை ஏற்படுத்துபவனும் அவன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவன்.

ஸர்வ விக்னஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்.

என்று போற்றுகிறது. அவரது தந்தை, தாயான சிவ-பராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.

பிள்ளையார் என்பது ஏன்?

தாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மாமியார் என்று சொல்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளை பிள்ளையார் என்று யாரும் சொல்வதில்லை. விதிவிலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோம். சிவபார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா இவரைப் பற்றி?

உடலில் உள்ள ஆறு ஆதாரங்களில் விநாயகருக்குரியது மூலாதாரம்!
விநாயகரை அருகம்புல்லால் பூஜிக்க உகந்த நாள் அஷ்டமி!
உலகின் மிகப் பழமையான ரிக் வேதத்தில் விநாயகர் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது!
விநாயகப் பெருமானை இந்து சமயத்தின் முழு முதற் கடவுளாக மாற்றியவர்கள்- குப்தர்கள்.
திருவரங்கத் திருமாலின் ஏகாந்த நித்திரைக் கோலத்தை முதன் முதலில் தொழுதவர்கள் கணபதியும், அகத்தியரும்!
மதுரைத் திருத்தலம் அருகிலுள்ள திருபுவனத்தில் தேங்காய் பிள்ளையார் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். இவரின் இயற்பெயர் விசாலாட்சி விநாயகர்!
பதினொரு விநாயகர்கள் உள்ள திருத்தலம் திருப்பாசூர்! இவர்கள் வாசீஸ்வரர் கோயிலில் ஒரு சன்னதியில் உள்ளனர்.
திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோயிலில் உள்ள நெல்லிக்கனி விநாயகருக்கு, நெல்லிக்கனி மாலை சாத்தி வழிபடுவர்!
÷ஷாடச (பதினாறு) விநாயகர்களில் முதலாமானவர் பால கணபதி!
விநாயகர் வழிபாடு தமிழருக்கு உரியதென மறைமலையடிகள் குறிப்பிடுகிறார்.
கி.மு 6-ஆம் நூற்றாண்டு நூலான தத்ரேய ஆரண்யத்தில் யானைக் கொம்புடைய இறைவன் எனக் குறிக்கப்படும் கடவுள், விநாயகர்!

ஆவணி மாத சிறப்பு

கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் (மலையாள புத்தாண்டு) முதல் மாதமாகப் பின்பற்றப்படுகிறது. முழுமுதற்கடவுளான விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி ஆவணியில் கொண்டாடப்படுவதன் அடிப்படையில் இவ்வாறு பின்பற்றுகின்றனர். கேரளத்தின் முக்கிய விழாவான ஓணம், இதே மாதத்தில் கொண்டாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இம்மாதத்தில் நவக்கிரக முதல்வரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார்.

விநாயகரால் விளைந்த நன்மைகள்: கணபதி இல்லாவிட்டால் அகஸ்தியர் தமது கமண்டத்தில் எடுத்துச் சென்ற காவிரி மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்குமா? காகரூபமாக வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை வெளிப்படுத்தினாரே! கணபதி இல்லாவிட்டால் ஸ்ரீரங்கநாதர் நமக்குக் கிடைத்திருப்பாரா? அவரது விக்ரகம் இலங்கைக்கல்லவா போயிருந்திருக்கும். கீழே வைக்கக்கூடாது என்ற  நிபந்தனையுடன், ஸ்ரீராமர் தான் வழிபட்ட ரங்கநாதர் விக்ரகத்தை விபீஷணனுக்குக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு இலங்கை நோக்கி வந்த விபீஷணன் ஸ்ரீரங்கம் பகுதியை அடைந்த போது மாலை நேரமாகிவிட்டது. மாலைச் சந்தி கர்மங்களைச் செய்யவேண்டுமே என விபீஷணன் யோசித்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் வடிவில் எதிரே வந்தார். அந்தச் சிறுவனிடம் சற்று நேரம் விக்ரகத்தைக் கையில் வைத்திருக்குமாறு கொடுத்த விபீஷணன் ஆற்றங்கரை நோக்கிச் சென்றான். அவன் திரும்பிவந்து பெற்றுக் கொள்வதற்குள் அதைத் தரையில் வைத்துவிட்டார் விநாயகர். அது அங்கேயே நிலைகொண்டுவிட்டது. விக்ரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றான் விபீஷ்ணன். ஆனால் இயலவில்லை. அந்த ஆத்திரத்தில் சிறுவனின் தலையில் ஓடிப்போய் குட்டினான். பின்னர் உண்மையறிந்து வணங்கிச் சென்றான். அவ்வாறு கோயில் கொண்டவரே ஸ்ரீரங்கநாதர். திருச்சி மலைமீதிருக்கும் உச்சிப்பிள்ளையாரே இந்தத் திருவிளையாடல் புரிந்தவர். அவர் தலையில் குட்டுப்பட்ட தழும்பு இருப்பதைக் காணலாம்.

இதேபோன்ற ஒரு நிகழ்வை இராவணனிடமும் நிகழ்த்தினார் பிள்ளையார் இராவணன் தவம் பல புரிந்து சிவனிடம் வரம்பெற்று, அவரிடமிருந்து ஆத்மலிங்கத்தைப் பெற்றுக்கொண்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான். அவனும் சிறுவன் வடிவில் வந்த விநாயகரிடம் ஆத்மலிங்கத்தைத் தர, அதைத் தரையில் வைத்துவிட்டார் விநாயகர். அதுவே கர்நாடக மாநிலத்திலுள்ள கோகர்ணம் அங்குள்ள கணபதி தலையிலும் இராவணன் குட்டிய வடுவைக் காணலாம். பராசக்தி தேவி பண்டாசுர வதத்திற்குக் கிளம்பினாள். ஆனால் விக்னயந்திரம் அதற்கு இடையூறாக இருந்தது. சக்திதேவி சிவனையும் கணபதியையும் நினைக்க, கணபதி அந்த விக்ன யந்திரத்தைத் தூளாக்கினார். அதன் பிறகே பராசக்தியால் பண்டாசுர வதம் செய்ய முடிந்தது.

விநாயகர் மூஷிக வாகனர் ஆனது எப்படி?

விநாயகரின் சிறப்பான வாகனம் மூஞ்சுறு (எலி) தான். மூஞ்சுறு எப்படி விநாயகருக்கு வாகனமானது. விநாயகப் பெருமானைப் போற்றி வணங்கும் கிரவுஞ்சன் என்னும் கந்தர்வ இளைஞன் ஒருவன் பூலோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவரின் மனைவியைக் கண்டு மோகித்து அவளின் கரங்களைப் பற்றி இழுத்தான். அதைக் கண்டு கோபங் கொண்ட முனிவர், மண்ணைத் தோண்டி வளையில் பதுங்கும் மூஷிகமாக மாறக்கடவாய் என சாபமிட்டார். அதனால் மூஷிகமாக (எலி) மாறி பராசர முனிவரின் ஆசிரமத்தில் புகுந்து எல்லாவற்றையும் கடித்துக் குதறி நாசம் செய்ததோடு அங்குள்ள மரங்களின் வேர்களைத் துண்டித்து விழச் செய்தும் அட்டகாசம் செய்த வண்ணம் இருந்தான். அச்சமயம் அபினந்தன் என்ற மன்னன் ஒரு யாகம் செய்தான். இந்திரன் தன் பதவிக்கு பங்கம் வராதிருக்க காலநேமி எனும் கொடிய அசுரனைத் தோற்றுவித்து அந்த யாகத்தை அழிக்கும்படி உத்தரவிட்டான். ஆனால் அவனோ அந்த யாகத்தை அழித்ததோடு மட்டும் அல்லாமல் பூவுலகம் முழுவதிலும் எங்கெங்கு யாகம் நடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று அவற்றை நாசப்படுத்தி அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினான். அதிலிருந்து விடுபட அனைவரும் ஈசனை வேண்ட அவரும் அருள் புரிந்தார். வரேனியன் என்னும் மன்னருக்கு மகனாகத் தாம் பிறக்கப் போவதாகச் சொல்லி அவ்விதமே யானைமுகத்துடன் அவதரித்தார். அதைக் கண்ட ராணியும் மன்னனும் வருத்தமடைந்து சாமுத்ரிகா லட்சணங்களுடன், பிறக்காத இக்குழந்தையை எடுத்துச் சென்று எங்காவது போட்டு விடுங்கள் என்று கட்டளையிட்டனர். அவனது படைவீரர்கள் அக்குழந்தையை எடுத்துக் கொண்டு போய் காட்டில் ஒரு குளத்தின் கரையில் வைத்து விட்டுச் சென்று விட்டனர். அவ்வழியே நீராடச் சென்ற பராசரர் அக்குழந்தையைக் கண்டு அதிசயித்து நம் பெருமாளே இந்தக் குழந்தையை நமக்கு அளித்துள்ளான் என்று அகமகிழ்ந்து வளர்த்து வந்தார். அக்குழந்தையும் நாளும் வளர்ந்து வரலானார்.

மூஷிகன் பராசரரின் குடிசைக்கு வந்து அட்டகாசம் செய்வது கண்டு கணேச பெருமான் தமது பரசு ஆயுதத்தை எடுத்து மூஷிகன் மேல் வீசினார். பரசு அவனை நோக்கிப் பாய்வதைக் கண்டு பயந்தபடி இங்குமங்கும் ஓடினான். பூமியைக் குடைந்தபடி பாதாளலோகம் வரை சென்றான். அப்போதும் பரசு ஆயுதம் அவனைத் துரத்தி வருவதைக் கண்டு சோர்ந்து போனான். பரசும் அவனைக் கட்டி இழுத்து வந்து பெருமான் முன்பாக நிறுத்தியது. மூஷிகன் தன் முந்தைய வரலாற்றைக் கூறி தம்மை மன்னித்தருளும் படி வேண்டினான். விநாயகரும் அவனை அரவணைத்து அருளினார். அதன்பின் காலநேமியை அழிக்க எண்ணங்கொண்ட போது அவனாகவே விநாயக பெருமானின் பாதங்களில் விழுந்து சரணடைந்து நற்கதி பெற்றான். இவ்விதமாய் மூஷிகத்தை வாகனமாகப் பெற்ற விநாயகர் மூஷிக வாகனர் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறார்.

விநாயகர் சதுர்த்தியன்று கடைபிடிக்க வேண்டியவை!

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.

நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.

கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர்,

ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா

எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது ஒன்றைப் படையில் அமையும்படியாக 3,5,7-ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்; லட்சுமி கடாட்சம் கிட்டும்.

கணபதிக்கு பிரியமான 21: கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?

ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

அபிஷேகப் பொருட்கள் 21: தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

இலைகள் 21: மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.

நிவேதனப் பொருட்கள் 21: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.

திதிக்குரிய கணபதி: பொதுவாக விநாயகருக்கு சதுர்த்தி திதி உகந்தது என்றாலும், ஒவ்வொரு திதிக்குமே அதற்குரிய கணபதிகள் உள்ளனர். அந்த நாளில் அதற்குரிய கணபதியை வழிபடுவது சிறப்பு பலன் தரும் என்பர்.

பிரதமை- பாலகணபதி; துவிதியை- தருண கணபதி; திரிதியை- பக்தி கணபதி; சதுர்த்தி- வீர கணபதி; பஞ்சமி- சக்தி கணபதி; சஷ்டி-துவிஜ கணபதி; சப்தமி-சித்தி கணபதி; அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி; நவமி- விக்ன கணபதி; தசமி- க்ஷிப்ர கணபதி; ஏகாதசி-ஹேரம்ப கணபதி; துவாதசி- லட்சுமி கணபதி; திரயோதசி- மகாகணபதி; சதுர்த்தசி-விஜய கணபதி; அமாவாசை, பவுர்ணமி- நித்ய கணபதி. அந்தந்த திதிக்குரிய கணபதி நாமத்தை 108 முறை கூறி தோப்புக்கரணம் போட்டு பக்தியுடன் வணங்கி வந்தால், நம் வாழ்வில் எதிர்ப்படும் விக்கினங்கள் விலகி சகல வளங்களும் கைகூடும்.

அருள்புரிவாய் ஆனைமுகா!

விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் படைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!

கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனை கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே! என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.

இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்க  வனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே! எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.

உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட
மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத்
தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.

உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.

பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். எங்களுக்கு இம்மையில் சகல செல்வத்தையும், மறுமையில் முக்தியையும் தந்தருள்வாயாக.

 
மேலும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு! »
temple news
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து ... மேலும்
 
temple news
உருவாய் அருவாய் திருவாய் விளங்குபவன் இறைவன். அனைத்துயிர்களிலும் அவனே குடிகொண்டுள்ளான். எனவே அவனது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar