மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் எழுந்தருளினார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் அழகருக்கு தீர்த்தவாரி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் தங்கினார். நேற்று காலை 9:00 மணிக்கு சேஷவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 3:00க்கு மேல் 4:00 மணிக்குள் கருடவாகனத்தில் வைகையாற்றில் உள்ள தேனுார் மண்டபத்தில் எழுந்தருளிய அழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின், ராமராயர் மண்டபத்திற்கு திரும்பினார். நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் தசாவதார நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு மோகினி அவதாரத்தில் அழகர் புறப்பாடு நடைபெற்றது. இன்று அதிகாலை 2:30 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் இருப்பிடம் புறப்பட்டார். நாளை (ஏப்., 27) காலை 10:00 முதல் 11:00 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.