Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவமாருதி வழிபாடு!
முதல் பக்கம் » அனுமன் ஜெயந்தி!
ஆஞ்சநேயரின் பிற கோயில்களும் அதன் சிறப்பும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 டிச
2011
03:12

ஊருக்கு ஒரு பெயர்: அனுமனை கர்நாடகத்தில் ஹனுமந்தையா, ஆந்திராவில் ஆஞ்சநேயலு, மகாராஷ்டிராவில் மாருதி, சில வடமாநிலங்களில் மகாவீர் என்று அழைக்கின்றனர்.

வாயைப் பொத்திய ஆஞ்சநேயர்: ராமனின் முன்பு தலையை குனிந்து, வாய் பொத்தி,  மிகுந்த மரியாதையுடன் உள்ள அனுமன் சிலை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் ராமசாமி கோயிலில் உள்ளது.

வால் அறுபட்ட ஆஞ்சநேயர்: ராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கின்றார் இவர். காசியிலிருந்த விசுவநாதலிங்கம் கொண்டு வரச் சென்ற ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதமாகவே, ஸ்ரீராமன் சீதையை மணலால் லிங்கம் அமைக்கச் செய்து பூஜையை முடித்து விடுகிறார். பின்வந்த அனுமன் ஆத்திரத்தில் மணல் லிங்கத்தை அப்பால் தள்ள முயல, அது முடியாமல் போகவே, வாலினால் சுற்றி பலம்கொண்ட மட்டும் இழுத்தார். அப்போது, அவரது வால் அறுந்து போனது. தனது தவறுணர்ந்து ராமனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் வால் வளரப் பெற்றார். இங்கு, வால் அறுபட்ட நிலையில் உள்ள ஆஞ்சநேயரின் சிலையைக் காணலாம்.

பாலரூப ஆஞ்சநேயர்: உடுப்பிக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் ஒரு சிறுகுன்றில் துர்க்கை கோயில் ஒன்றுள்ளது.  அதன் கீழ் குளக்கரையில் கோவணாண்டியாக பாலரூப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். உடலெல்லாம் உரோமம் தெரியும்படி அருமையாக அச்சிலை வடிக்கப்பட்டுள்ளது.

யந்த்ரோத்தாரக அனுமன்: ஹம்பியில் எழுந்தருளியிருப்பவர் இவர். ஆஞ்சநேயரை யந்திரத்தில் வடிவாக அமைத்துள்ளனர். பத்ம தளத்தோடு கூடிய ஒரு வட்டத்தின் நடுவே ஆறுகோணம் கொண்ட யந்திரம் வரையப்பட்டுள்ளது. அதன் மத்தியில் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். கோணங்களிலே பீஜாக்ஷரங்கள் உள்ளன. வட்டத்தின் உட்புறம் தியான ஸ்லோகம் கிரந்த எழுத்தில் உள்ளது.

ஜன்மபூமி ஆஞ்சநேயர்: பன்னூரில் உள்ள ஆஞ்சநேயர், ஆலயத்தில் கையைக் கூப்பிக் கொண்டு பவ்யமாக நிற்கும் பக்த ஆஞ்சநேயர் ஜன்மபூமி ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கியிருக்கிறார்.

பிரபத்யாஞ்சநேயர்: மங்கள கிரி (ஆந்திரா) கல்யாண சரஸ் திருக்குளத்தின் கரையில் இந்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார். இவரே மங்களகிரியின் காவல் தெய்வம். ராமாவதாரம் முடிந்து ஸ்ரீமத் நாராயணன் வைகுண்டம் செல்லும்போது ஆஞ்சநேயரை மங்களகிரியிலேயே தங்கி நரசிம்மரை வழிபட்டுக் கொண்டிருக்கும்படி பணித்துவிட்டுச் சென்றதாக இத்தல புராணம் கூறுகிறது.

குபேர ஆஞ்சநேயர்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் தான் குபேர ஆஞ்சநேயர் உள்ளார். ஆஞ்சநேயர், ராமனை பார்த்தபோது அவர் தென்திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். வடக்கு பக்கமாக திரும்பி அவரை பார்த்ததால் இத்தலத்து ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தபடியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம். இத்தலத்து ஆஞ்சநேயர் பிரகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக அருளுகிறார்.இவர், தனது வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம் போல வைத்து, வராக (பன்றி) முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலையர் திருக்கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்õலிக்கிறார். இவரது வாலின் நுனிப்பகுதி தலைக்கு மேல் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இவரை வணங்கினால் குபேர சம்பத்து பெருகும் என்பது நம்பிக்கை.

பெருமாள் கருவறைக்குள் ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயிலில் உள்ள மூலவர் சுமார் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர். ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோயிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே இருப்பது சிறப்பம்சம்.

வீரஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சண்முகபுரம் வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீரஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நின்ற திருகோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆனால் இவரது காலின் கீழ்பகுதி ஆற்றுநீர் படும் வகையில் பூமிக்குள் அமைந்திருப்பது சிறப்பு.

பிரமாண்டமாய் ஆஞ்சநேயர் தரிசனம்: தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல் புரம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 75 அடி உயரத்தில் பிரமாண்டமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

சத்திய ஆஞ்சநேயர்: செங்கல்பட்டில் கோட்டைச் சுவரில் எழுந்தருளியிருக்கிறார் இவர். மக்கள் தங்களுக்குள் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்துக் கொள்ள இவருடைய சன்னதியில் சத்தியம் செய்வதுண்டு. இங்கே பொய் சத்தியம் செய்வோர் அழிவர் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.

32 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர்:  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆலங்குடிக்கு ஒரு கி.மீ. தூரத்தில்  ஞானபுரி தலத்தில், 32 அடி உயர விஸ்வரூப சங்கடகர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைகள் இவரது இடுப்பில் செருகி இருப்பது போன்று இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  இவரை வணங்கினால் சகலவிதமான நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.

கண்ணொளி தரும் ஆஞ்சநேயர்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தேரடியின் கீழ்  தனிக்கோயிலில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். வெண்பாப்புலி வேலுசாமிப் பிள்ளை என்பவர் இந்த ஆஞ்சநேயரை புகழ்ந்து ஆஞ்சநேய புராணம் என்ற துதியைப் பாடி இழந்த தன் பார்வையை மீண்டும் பெற்றார் என்பது வரலாறு. இது ஒரு சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.

விஸ்வரூப ஆஞ்சநேயர்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டைக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு சிறு குன்றில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன் அருள்பாலிக்கிறார். இவரது வலது கை பக்தர்களின் துன்பங்களை அறைந்து விரட்டுவது போல  அமைந்திருக்கிறது. எனவே இவர் துஷ்ட நிக்ரஹ அனுமன் எனப்படுகிறார்.

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் பங்கி என்ற இடத்தில் புகழ்பெற்ற அனுமன் கோயில் உள்ளது. புராண காலத்திலும் வேத காலத்திலும் மிகப் புகழ்பெற்ற இடமான இங்கு  காலை சூரிய ஒளியில் பார்க்கும்போது அனுமன் குழந்தை வடிவிலும், மதிய வேளையில் இளைஞனாகவும், மாலை வேளையில் வீர புருஷராகவும் மூன்று வடிவங்களில்  தினமும் காட்சி தருகிறார்.

பால ஆஞ்சநேயர்: கும்பகோணம் அருகில் உள்ள திருப்பனந்தாளில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் உள்ள பந்தநல்லூருக்கு கிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ளதலம் திருமங்கைச்சேரி. இங்குள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் காட்சிதரும் பால ஆஞ்சனேயர், தனது வலது காலை முன் வைத்து பக்தர்களை காக்க தயாராக இருப்பது போன்ற கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.

கோவணாண்டி ஆஞ்சநேயர்: கர்நாடக மாநிலம் உடுப்பிக்கு கிழக்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ள சிறுகுன்றில் அமைந்துள்ள துர்க்கை கோயிலின் கீழ் உள்ள குளக்கரையில்  பாலரூப ஆஞ்சநேயர் தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறார். இவரது சிலை முழுவதும் உரோமம் தெரியும்படியாக சிலை வடிக்கப்பட்டுள்ளது.

யோக  ஆஞ்சநேயர்: மதுரை கோ.புதூர் சூர்யாநகர் முத்தப்பா சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 30 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் அருள்பாலிக்கிறார்.

கம்பீர ஆஞ்சநேயர் : காஞ்சிபுரம் மாவட்டம் மகாரண்யத்தில் கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 24 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.

காடு ஹனுமந்தராயர் : ஈரோடு தாராபுரம் காடு ஹனுமந்தராய சுவாமி ஏழு அடி உயரம், மூன்று அடி அகலத்துடன் உள்ளார். இடுப்பில் சலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. வலது இடுப்பில் கத்தியும், கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலைகளும் காணப்படுகிறது. வலது கை அபயஹஸ்தமாகவும், இடது கை சவுகந்திகாமலர் ஏந்திய நிலையிலும் உள்ளது. முகம் வடகிழக்கு திசை நோக்கியும், பாதங்கள் வடக்கு நோக்கியும் உள்ளன. கிரீடத்தின் பின் புறத்தில் பட்டாகத்தி இருக்கிறது. முகத்தின் வலதுபுறம் சக்கரமும் இடதுபுறம் சங்கும் உள்ளன. வாலில் மூன்று மணிகள் உள்ளன.

நரசிம்ம ஆஞ்சநேயர் : சென்னை வரதராஜபுரம் நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஒரே சிலையில் நரசிம்ம வடிவும், ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுகமாக இணைந்திருப்பது சிறப்பு.

வீர ஆஞ்சநேயர் : திருவண்ணாமலை களம்பூர் வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் 23 அடி உயரத்தில் அஞ்சலிஹஸ்த நிலையில் (கைகூப்பிய நிலை) வீர ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

சுயம்பு ஆஞ்சநேயர் : கோயம்புத்தூர் மாவட்டம் சண்முகபுரம் வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீரஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள இரட்டைமுகத்துடன் கூடிய விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

வாலறுந்த ஆஞ்சநேயர் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார், வாலறுந்த ஆஞ்சநேயர்

சிவ ஆஞ்சநேயர்: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குரக்காவில் குந்தளேஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால், ராமாவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார். அவ்வகையில் இத்தலத்தில் சிவனே, தன்னை வழிபடும் கோலத் தில் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இவரை, சிவஆஞ்சநேயர் என்றும், சிவபக்த ஆஞ்சநேயர் என்றும் அழைக்கிறார்கள்.

பாஸ்போர்ட் ஆஞ்சநேயர் : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர அழகர் திருக்கோயில் உள்ளது. பெருமாளைப்போலவே இங்கு அனுமன் மிக விசேஷம். இந்த அனுமனுக்கு சாற்றப்படும் வடை மாலை ஒருமாதம் ஆனாலும் கெடாது. இவருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் பாஸ்போர்ட் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ராமதாச அனுமன்:  கும்பகோணம் அணைக்கரை ரோட்டிலுள்ள திருவெள்ளியங்குடி கோலவல்லி ராமர் கோயில் எதிரிலுள்ள கோயிலில் ராமதாச அனுமான் அருள்பாலிக்கிறார். பாஸ்போர்ட், வெளிநாட்டு வேலைக்காக இவரை வணங்குகின்றனர்.

இலங்கையின் உயரமான அனுமன்

இலங்கை. நுவரேலியா அருகிலுள்ள வௌன்டன் மலையில்,ரம்பொட என்ற ஊரில் சின்மயா மிஷன் சார்பில் அனுமன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அனுமன் வந்ததும் இந்த மலையில் தான் முதன் முதலாக கால் ஊன்றியதாக சொல்லப்படுகிறது. இந்த அனுமனின் உயரம் 18 அடி.

சங்கு சக்கர ஆஞ்சநேயர்:காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில், சுவாமி சந்நிதி எதிரே ஆஞ்சநேயர் சங்கு சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். இது ஒரு மாறுபட்ட கோலமாகும்.

அவல் நைவேத்தியம்: கேரள மாநிலம் தலைச்சேரி அருகிலுள்ள திருவெண்காட்டில் ராமசாமி கோயில் உள்ளது. இங்கு ராமரும் அனுமனும் மட்டும் அருள்பாலிக்கிறார்கள். அனுமான் ராமனுக்கு எதிரில் வணங்கிய கரங்களுடன் காட்சி தருகிறார். இங்குள்ள அனுமனுக்கு அவல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

அனுமனுக்கு தாழம்பூ மாலை: தாழம்பூமாலையை பொதுவாகப் பூஜைக்குப் பயன்படுத்துவதில்லை. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை அல்லது துளசிமாலை பிரியமானது. அவர் ராமனின் விசுவாசி என்பதாலும் துளசி மாலை அணிவர். ஆனால், கர்நாடகா, கோலார் மூலபாகல் ஆஞ்சநேயருக்கு தாழம்பூ மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.

ராம பாராயண ஆஞ்சநேயர்:  ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயில் அருகேஉள்ள நந்தவனத்தில் ராமநாமம் பாராயணம் செய்யும் கோலத்தில் அனுமன்
வீற்றிருக்கிறார். அருகே ராமர், பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார்.

தாமரை மலரில் சுந்தரன்: அங்கோலாவில் உள்ள பண்டே ஸ்ரீ கோயிலின் நுழைவுவாயிலிலும், தாய்லாந்தில் உள்ள பீமாய் கோயிலிலும், கம்போடியாவிலுள்ள சில கோயில்களிலும், ஜாவாவில் உள்ள பிரம்பாணம் கோயிலிலும் அனுமனுக்கு சிலைகள் உள்ளன. கலிபோர்னியா, லிவர்மோர் நகரத்திலுள்ள சிவவிஷ்ணு கோயிலில், தாமரை மலர் மீது நின்ற நிலையில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உயரம் 14 அடி.

சஞ்சீவி மலையுடன் அனுமன்:  சஞ்சீவி மலையை ஒரு கையிலும், இன்னொரு கையில் கதையையும் தாங்கி நிற்கும் அனுமனைப் பார்க்க வேண்டுமானால் ஆந்திர மாநிலம் செகந்திரபாத் செல்ல வேண்டும். இங்குள்ள ரயில்வே ஸ்டேஷன் அருகே கோயில் உள்ளது. பத்து கரங்களுடன் காட்சி தரும் இவர் வராகர், கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர் ஆகிய ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயராகவும் காட்சி தருகிறார்.

ராஜபாளையம் மற்றும் கன்னியாகுமரி அருகில் உள்ள மலைகள் பல மூலிகைகளை கொண்டுள்ளது. இலங்கையில் ராவணனுடன் போர் செய்த போது லட்சுமணன்
மூர்ச்சையானான். அவனை எழுப்ப ஒரு மூலிகையைப் பறித்து வரும் படி அனுமனை அனுப்பினார் ராமன். எந்த மூலிகை எனத்தெரியாததால் ஒரு மலையையே பெயர்த்துக் கொண்டு வானவெளியில் பறந்து வந்தார் அனுமன். அதிலிருந்து சில துண்டுகள் கீழே விழுந்தன. அவையே ராஜபாளையம் அருகிலும், கன்னியாகுமரி அருகிலும் இருப்பதாக சொல்வதுண்டு. மூலிகை கொண்ட மலைகள் என்பதால் சஞ்சீவி மலை என்றும் மருந்துவாழ் மலை என்றும் இந்த மலைகளுக்கு பெயர் ஏற்பட்டது.

ஏணியில் ஏறி அபிஷேகம்:ஆந்திரா, குண்டூர் அருகிலுள்ள பொன்னூர் பெருமாள் கோயிலில் 25 அடி உயர அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சிறிய திருவடி அனுமன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதே கோயிலில் 30 அடி உயரமுள்ள பெரிய திருவடி கருடாழ்வார் சிலையும் உள்ளது. இரண்டு சிலைகளுக்கும் ஏணியில் ஏறி  அபிஷேகம் செய்வர்.

திருப்பதியில் திருப்பம் திருத்துறைப்பூண்டியில் திருப்தி

கிரகதோஷம் நீங்க திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும். திருத்துறைப்பூண்டி வைராக்கிய ஆஞ்சநேயரை தரிசித்தால் திருப்தி உண்டாகும். ராமாவதாரத்தில் தான் அனுமன் அவரது தொண்டனாக வருகிறான். இங்கு அமாவாசையன்று மட்டைத் தேங்காய் வழிபாடு செய்யலாம். இந்த வழிபாடு நடத்தும் பக்தர்களுக்கு டோக்கன் தரப்பட்டு, ஆஞ்சநேயர் சந்நிதியில் வரிசையாக அர்ச்சனை செய்யப்படும். காலை 6 மணிக்கு பூஜை துவங்கும். அன்று முழுவதும் நடைதிறந்திருக்கும். ஒரு மீட்டர் சிவப்புத் துணியில் மட்டைத் தேங்காய் (உரிக்காத முழு தேங்காய்) வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, காசு வைத்து தங்களது நியாயமான வேண்டுதலையும் ஒரு சீட்டில் எழுதி கட்டி அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். அவர் பூஜை செய்து கோயில் உத்திரத்தில் கட்டி விடுகிறார். அவ்வாண்டுக்குள் கோரிக்கை நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை. மழலை பாக்கியம் கிடைத்தல், வறுமை, திருமணத்தடை, தொழில் கஷ்டம், தேவையற்ற பயம் நீங்குதல், குடும்ப ஒற்றுமை வேண்டுதல் ஆகிய நியாயமான குறைகள் குறித்து அனுமனிடம் வேண்டலாம்.

குரங்குகள் நினைவாலயம்

காட்பாடியிலுள்ள கல்புதர் பகுதியில் அதிசய பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் வசித்த ஐந்து குரங்குகள், குட்டிகளுடன் இறந்துவிட்டன. அவற்றை ஒரு இடத்தில் புதைத்தனர். இவ்வூரில் உள்ள ஒருவரது கனவில் அசரீரி சொன்னபடி இந்த சிலை அமைக்கப்பட்டது.

பெருமாள் அருகில் அனுமன்

ராமர் அருகில் மட்டுமில்லாமல், தேனி அருகிலுள்ள சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் மூலஸ்தானத்தில், பெருமாள் அருகிலும் அனுமனைத் தரிசிக்கலாம்.

வீரமங்கள ஆஞ்சநேயர்

நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள பொரவச்சேரி ராமபத்ர பெருமாள் கோயிலில் வீரமங்கள ஆஞ்சநேயர், வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை வடக்கு நோக்கி மடித்து வைத்த நிலையில் தரிசனம் தருகிறார்.

சென்னை நங்கநல்லூர்

சென்னை நங்கநல்லூர் கோயிலுக்கு அடித்தளமிட்டவர் மயிலாப்பூர் ரமணி அய்யர். இவரது கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், நங்கநல்லூரில் கோயில் கட்ட ஆணையிட்டார். 3 2 அடி உயரமும், 10அடி சுற்றளவும், 10 அடி அகலமும் கொண்ட சிலையின் எடை 150டன். இந்த சிலை செய்வதற்கான கல்லைப் பெற்ற காஞ்சிப்பெரியவர், அதில் துளசி மாலையை சுற்றி தன் தலையில் வைத்துக் கொண்டார். அனுமன் சிலை அமைக்க இதுவே சிறந்த கல் என்று ஆசி வழங்கினார். 

மதுரை ஜெயவீர ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர், அசோகவனத்தில் சீதையிடம் சூடாமணியையைப் பெற்றுவிட்டு திரும்பியபோது, ராமரிடம், கண்டேன் சீதையை என்று வெற்றிச் செய்தியைத் தெரிவித்தார். இக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் மதுரையில் கோயில் கொண்டிருக்கிறார். இவருக்கு, ஜெயவீர ஆஞ்சநேயர் என்பது திருநாமம். இலுப்பை மரத்தடியில் கிழக்கு நோக்கிய திருக்கோலம். வெண்ணெய், மாப்பொடி, சந்தனக் காப்பு செய்வது சிறப்பாகும். வைகைநதி வாய்க்காலில் புதைத்திருந்த இந்த ஆஞ்சநேயர் சிலை, குழந்தையானந்த சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். மதுரை சிம்மக்கல்லில் அனுமார்கோயில் படித்துறையில் உள்ளது. 

தஞ்சாவூர் மூலை அனுமார்

தஞ்சாவூரை ஆண்ட மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், ஊரின் வடமேற்கு மூலையில், கிழக்கு நோக்கி கோயில் எழுப்ப கட்டளையிட்டார். ஊரின் மூலையில் இருந்த காரணத்தால், மூலைஅனுமார் கோயில் என்று பெயர் பெற்றது. மார்கழியில் ஏதாவது ஒருநாளில் ராமநாமம் ஜெபித்தபடி இவரை 18 முறை வலம் வந்தால் நினைத்தது நிறைவேறும். பிரதாபசிம்ம மன்னன், போரில் வெற்றி அருளும் படி மூலை அனுமாரிடம் வேண்டி வெற்றி பெற்றான். அவனது பெயரால் பிரதாப வீர ஆஞ்சநேயர் என்ற பெயரும் ஏற்பட்டது. தஞ்சாவூர் மேலவீதியில் சிவகங்கை பூங்கா எதிரில் கோயில் உள்ளது. 

கோவை அஷ்டாம்ச வரதஆஞ்சநேயர்

கோவை காந்திபுரத்தில் இருந்து பீளமேடு ரோட்டில் அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. மூலவர் சாளக்கிராமத்தால் ஆனவர். சிவலிங்கத்திற்குள்
காட்சியளிப்பது சிறப்பம்சம். ஆஞ்சநேயரின் வால், குபேர திசையான வடக்கு நோக்கி இருப்பதால் வழிபடுவோருக்கு கிரகதோஷம் நீங்குவதோடு செல்வவளமும் பெருகும். உற்சவர் சிலை ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் வழங்கப்பட்டது. சுவாமியின் வலக்கையில் மகாலட்சுமி குடிகொண்டிருப்பதாக ஐதீகம்.

திருநெல்வேலி

திருநெல்வேலியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்குள் கோயில் கொண்டிருக்கிறார் சஞ்சீவி வரத ஆஞ்சநேயர் . நோய் தீர மருத்துவமனை வருபவர்களுக்கு சிரஞ்சீவியாக இருந்து வரம் அளிக்கிறார். மருத்துவமனையின் பெயரால் கெட்வெல் ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்படுவார். குழந்தை போல காட்சியளிக்கும் இவரை அனுமன் ஜெயந்தியன்று வழிபடுவது மிகவும் பொருத்தம். திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டை ஒட்டி கோயில் உள்ளது.

நாமக்கல்

18 அடி உயரத்துடன் கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் கொண்டு காட்சி தரும் இவர், எதிரே இருக்கும் லட்சுமி நரசிம்மரை வணங்கியபடி நிற்கிறார். நேபாளம் கண்டகி நதியில் நீராடிய ஆஞ்சநேயர் ஒரு சாளகிராமக்கல் கிடைக்கப் பெற்றார். அதனை வழிபட எண்ணி வான்வழியே பறந்து வந்தார். வழியில் லட்சுமிதேவி தவம் செய்வதைக் கண்டு இறங்கினார். அங்கிருந்த கமலதீர்த்தத்தில் நீராட எண்ணினார். சாளகிராமத்தை கீழே வைக்கக் கூடாது என்பதால், நீராடி வரும் வரை அதனை வைத்திருக்கும்படி லட்சுமியிடம் கொடுத்தார். நேரம் அதிகமானதால், லட்சுமி அதனை கீழே வைக்க, அக்கல்லே மலையாக உருவெடுத்தது. அம்மலையில் விஷ்ணு நரசிம்மமூர்த்தியாகத் தோன்றி லட்சுமிக்கும், ஆஞ்சநேயருக்கும் காட்சியளித்தார். அதைக் கண்ட ஆஞ்சநேயர் அங்கு தங்கிவிட்டார். நாமக்கல் பஸ்ஸ்டாண்டில் இருந்து ராசிபுரம் செல்லும் வழியில் 2கி.மீ., தூரம்.

புதுச்சேரி பஞ்சவடி

ராமனை வெல்வதற்காக மயில்ராவணன் என்ற அசுரனோடு சேர்ந்து ராவணன் யாகத்தில் ஈடுபட்டான். அவனுடன் போருக்குப் புறப்பட்ட ஆஞ்சநேயருடன், நரசிம்மர், ஹயக்ரீவர், வராகர், கருடன் ஆகிய நால்வரும் தங்களின் அம்சத்தையும் சேர்த்தனர். ஐந்து முகம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயராக விஸ்வரூபம் எடுத்து மயில்ராவணனைக் கொன்றார். இந்த ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் ரோட்டில் 10 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சவடியில் 12 ஏக்கர் பரப்பில் கோயில் கட்டப்பட்டது. 36 அடி உயரம் கொண்டவர். 118அடி உயர கோபுரம், 1200 கிலோ மணி, 18மீட்டர் அகலம், 40மீ ஆழமும் கொண்ட தீர்த்தக்கிணறு உண்டு. அபிஷேக, அலங்காரம் செய்ய லிப்ட் வசதி உள்ளது. 

சேதுக்கரை

ராமநாதபுரம் அருகிலுள்ள திருப்புல்லாணியிலிருந்து 4 கி.மீ. தூரத்திலுள்ள சேதுக்கரையில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இலங்கை செல்ல பாலம் அமைக்க அனுமன் தங்கிய இடத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

சிறுமுகை

மேட்டுப்பாளையம் அருகில் உள்ள சிறுமுகை ஜெயமங்கள ஆஞ்சநேயர் கால்களில் தண்டை அணிந்தும், சுதர்சனம் பொறித்த வலக்கையால் ஆசியளித்தும், இடக்கையில் மலர் ஏந்தியும் காட்சியளிக்கிறார். எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறடி உயரம் கொண்டவராக உள்ளார். 13ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது.

பெரணமல்லூர்

வயலில் உழும்போது ஏர்முனையில் கண்டெடுக்கப்பட்டவர் பெரணமல்லூர் (திருவண்ணாமலை மாவட்டம்) வரத ஆஞ்சநேயர். குழந்தையில்லாத விவசாயி ஒருவர், ஒரு குன்றின்மீது இவரை பிரதிஷ்டை செய்து வழிபட, மறு ஆண்டே குழந்தை பிறந்தது. சந்நிதி கிழக்கு நோக்கி இருப்பினும் சுவாமியின் முகம் வடக்கு நோக்கி உள்ளது. வந்தவாசியில் இருந்து 22கி.மீ.,

கல்லுக்குழி

திருச்சி ஜங்ஷன் ரயில்வே காலனியில் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. ரயில்வே பணிக்காக வந்த கற்களில் ஆஞ்சநேயர் வடிவில் இருந்த கல்லை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். ஆர்ம்ஸ்பி என்ற ஆங்கிலேயர், கால் இடறி விழுந்ததால், அதனை அகற்றும்படி உத்தரவிட்டார். அன்றிரவு கனவில், குரங்குகள் சூழ்ந்து கொண்டு அவரை விரட்டின. அந்த இடத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்ட அனுமதியளித்தார். இடக்கையில் பாரிஜாதமலர், வலக்கையில் அபயமுத்திரை காட்டி அருள்புரிகிறார். 

சுசீந்திரம்

சுசீந்திரம் தாணுமாலயசுவாமிகோயிலில் 18அடி உயர ஆஞ்சநேயர் உள்ளார். இவரை வலம் வந்து வழிபட வசதியிருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 5 கி.மீ., .
 
சின்னாளபட்டி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில், அஞ்சலி வரதஹஸ்த ஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். வானர வீரர்களான நளன், நீலன், அங்கதன், குமுதன், சுக்ரீவன், ஜாம்பவந்தன், ஜிதன், ஜீவிதன் ஆகியோர் இவருடன் உள்ளனர் கோயில் விமானத்தில் சுந்தரகாண்டத்தின் 64 காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பக்தர்களால் எழுதப்பெற்ற ஒரு கோடி ராமநாமம் இங்குள்ளதால், ஒருமுறை மூலவரை வலம் வந்தால் ஒருகோடி முறை ராமநாமம் ஜெபித்த புண்ணியம் கிடைக்கும்.

சோளிங்கர்

108 திவ்யதேசங்களில் ஒன்றான சோளிங்கரில் உள்ள சிறிய மலையில் சங்கு சக்கரம், ஜெபமாலை ஏந்தி நான்கு கைகளுடன் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவரது கண்கள் பெரியமலையில் உள்ள யோகநரசிம்மர் திருவடியை நோக்கி உள்ளது. இவர் மனதைரியம் அருள்பவர். 13ம் நூற்றாண்டில் பராங்குச சோழனால் கட்டப்பட்டது. சுவாமியின் அருளைப் பெற 24நிமிஷ நேரம் இம்மலையில் தங்கினாலே போதும். வேலூர்- திருத்தணி ரோட்டில் 60கி.மீ.

கடையநல்லூர்

கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் சுயம்புமூர்த்தியாக ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் ஆறடிஉயரத்தில் தெற்குநோக்கி வீற்றிருக்கிறார். லட்சுமியின் அம்சமான நெல்லிமரம் தலமரமாவும், அனுமன் பெயரில் தீர்த்தம் இருப்பதும் சிறப்பு. ராமர் கொடுத்த கணையாழியை தன் ஆள்காட்டிவிரலில் அணிந்தபடி, கிரீடம் இல்லாமல் சாமான்யனாக எளிமையுடன் இருப்பது இவரின் தனித்தன்மை. சனிக்கிழமைகளில் தொடர்ந்து வணங்க நினைத்தது நடக்கும். மதுரையில் இருந்து செங்கோட்டை ரோட்டில் 145 கி.மீ.

பால ஆஞ்சநேயர்

 திருப்பனந்தாள்- சீர்காழி ரோட்டிள்ள பந்தநல்லூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் திருமங்கைச்சேரி வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பால ஆஞ்சநேயர் அருள் செய்கிறார்.

அனந்தமங்கலம்

ராவணனின் ஆதரவாளர்களான ரக்தபிந்து, ரக்த ராட்சஷன் என்ற அசுரர்களை அழிக்க எண்ணிய பரத்வாஜர் ராமனின் உதவியை நாடினார். திருமாலின் சங்கு, சக்கரம், ருத்ரனின் மழு, ராமனின் வில், அம்பு, இந்திரனின் வஜ்ராயுதம் ஆகியவற்றுடன் அனுமன் அவர்களை அழிக்க கிளம்பினார். அவருக்கு சிவன் தன் நெற்றிக்கண்ணை வழங்கினார். அசுரர்களை கொன்ற அனுமன் ஆனந்தமாக ஓரிடத்தில் ஓய்வெடுத்தார். அது, ஆனந்தமங்கலம் என்றாகி அனந்தமங்கலம் ஆனது. இங்கு திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை- நாகபட்டினம் சாலையில் 25கி.மீ.,.

திண்டுக்கல் அணைப்பட்டி

இவர் வீரஆஞ்சநேயர் எனப்படுகிறார். 300 ஆண்டுகளுக்கு முன், அம்மையநாயக்கனூர் ஜமீன் காமயசாமியின் கனவில் அனுமன் தோன்றி, வைகை ஆற்றின் நடுவில் தாழம்பூ புதருக்குள் சுயம்புமூர்த்தியாக இருப்பதாகவும், தன்னை வழிபடும்படியும் ஆணையிட்டார். அதன்படி, அவருக்கு கோயில் எழுப்பப்பட்டது. ஆறரை அடி உயரம் கொண்ட இவர் வலக்கண்ணை அயோத்தி மீதும், இடக்கண்ணை பக்தர்கள் மீதும் வைத்திருப்பதாக ஐதீகம். நிலக்கோட்டையில் இருந்து 11கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

மங்கள மாருதி

திருக்கழுக்குன்றம்-மாமல்லபுரம் ரோட்டில் 2 கி.மீட்டரில் உள்ள கொத்திமங்கலத்தில் மங்களமாருதி அருள்பாலிக்கிறார். குழந்தைகளுக்கு பாலாரிஷ்டம் நீங்கவும், கல்வியில் கவனக் குறைவு நீங்கவும் வியாழன், சனிக்கிழமைகளில் யாகம் பூஜை செய்கிறார்கள். வழக்குகளில் வெல்லவும், பணிநிலை உயர்வு பெறவும் அமாவாசையில் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்கிறார்கள். வாழை, பலா, கொய்யா இவருக்கு நிவேதனம்.

துஷ்ட நிக்ரஹ அனுமான்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டை செல்லும் வழியில் உள்ள சிறு குன்றில் துஷ்ட நிக்ரஹ அனுமான் அருள்பாலிக்கிறார்.  வலது கைபக்தர்களின் துன்பங்களைஅறைந்து விரட்டுவது போல வடிக்கப்பட்டுள்ளது.

கருட ஸ்தம்ப ஆஞ்சநேயர்!

ஈரோடு மாவட்டதில் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றின் வடகரையில் வேணுகோபாலசுவாமி ஆலயம் உள்ளது. ராஜகோபுரத்திற்கு முன்பாக சுமார் அறுபதடி உயரமுள்ள கருட ஸ்தம்பம் ஒரே கல்லால் செய்யப்பட்டு வானுயர்ந்து நிற்கிறது. தூணின் கிழக்குப் பக்கம் சுமார் ஆறடி உயரத்தில் புடைப்புச் சிற்பமாக ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். தூணின் பின்புறம் மூலவரான வேணுகோபால ஸ்வாமியைத் தொழுத வண்ணம் கருடன் காட்சி தருகிறார். தூணின் மற்ற இரு பாகங்களிலும் சங்கு, சக்கரங்கள் காட்சியளிக்கின்றன. இந்த கருட ஸ்தம்பத்தில் உள்ள ஆஞ்சநேயரையே மூலவராகக் கொண்டு தனிச் சன்னதி கொண்ட ஆலயமாக அமைத்துள்ளார்கள். எனவே இவர் கருட ஸ்தம்ப ஆஞ்சநேயர் எனப்படுகிறார். ஆஞ்சநேயர் சன்னதிக்கு வலதுபுறம் ராமர், லட்சுமணர், சீதை, அனுமனின் உற்சவ மூர்த்திகள் தனிச் சன்னதி கொண்டுள்ளனர்.

அதிசய ஆஞ்சநேயர்

கோபிசெட்டிபாளையத்திலிருந்து 8 கி.மீ.ல் உள்ள கூகலூரில் அதிசய ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.   ஆறடி உயர கருங்கற்சிலையாக அழகே உருவாக கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு நின்ற திருவடிவினராகக் காட்சியளிப்பதால் அதிசய ஆஞ்சநேயர் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறார்.
 பக்தர்கள் பலர் வேண்டுதல் நிறைவேறியதும் இந்த அதிசய ஆஞ்சநேயருக்கு விசேஷ அலங்காரம் செய்து நூற்றுக்கணக்கான ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும், ஆடைதானமும் செய்கிறார்கள்.

சனி தோஷம் போக்கும் மகாவீர ஆஞ்சநேயர்!

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவிலும் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது வ.உ.சி. பூங்கா. இந்தப் பகுதியில்தான் கோயில் கொண்டுள்ளார், மகாவீர ஆஞ்சநேயர். பேச்சிப்பாறை எனும் பகுதியில், சுயம்புத் திருமேனியாகக் காட்சி தந்த அனுமன், இங்கே இந்த ஆலயத்தை நிறுவி, பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்கிறது ஸ்தல வரலாறு. சனி பகவானால் பிடிக்கப்படாத விநாயகரும் இங்கு அமைந்திருப்பதால், இதை சனிப் பரிகாரத் தலம் எனப் போற்றுகின்றனர்.

சஞ்சீவி ஆஞ்சநேயர்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது தலைமை தபால் நிலையம். இதன் அருகில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார், சஞ்சீவி ஆஞ்சநேயர். புதுக்கோட்டை மன்னர் பரம்பரையினரால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஆலயம் இது. சஞ்சீவி மலையை ஏந்தி, வாலில் மணியுடன் கிழக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஆஞ்சநேயர், மிகுந்த வரப்பிரசாதி. மாதந்தோறும் மூலநட்சத்திர நாள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இங்கு வந்து ஆஞ்சநேயரைத் தரிசித்தால், தீராத நோயும் தீரும். திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை!

ஒளிமயமான வாழ்க்கை

கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1கி.மீ. தொலைவில் கெடிலம் நதிக்கரையில் உள்ளது வீர ஆஞ்சநேயர் திருக்கோயில். இங்குள்ள வனத்தில் கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேயர்.  அனுமன் ஜெயந்தி நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து அனுமனை மனதாரப் பிரார்த்தித்துச் செல்கின்றனர். இந்தத் திருநாளில், அனுமனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் என அமர்க்களப்படும்.

புதுக்கோட்டை ஆஞ்சநேயர்

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில், சுமார் 29 கி.மீ. தொலைவில் உள்ளது அழியாநிலை எனும் கிராமம். ஒரே கல்லால் , சுமார் 12 அடி உயரத்தில் மிகப் பிரமாண்டமாக எழுந்தருள்வதால், இவருக்கு விஸ்வரூப ஆஞ்சநேயர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றனர்.  இந்த ஆஞ்சநேயருக்கு மேற்கூரை இல்லை.  இந்தக் கோயிலில் இன்னொரு சிறப்பு... சுமார் 33 அடி உயரத்தில், பஞ்சமுக ஆஞ்சநேயரின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இந்தத் தலத்துக்கு வந்தால், விஸ்வரூப ஆஞ்சநேயரையும் பஞ்சமுக ஆஞ்சநேயரையும் கண்ணாரத் தரிசித்து, பலன் பெறலாம்.

பணமூட்டை ஆஞ்சநேயர்!

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் திருப்பணிப்பேட்டை நகரில் அருள்பாலிக்கிறார் சொர்ண ஆஞ்சநேயர். இரண்டரை அடி உயர கருங்கல் திருமேனி. கைகளில் தங்கக்காசு மூட்டை ஏந்தியிருக்கிறார்.

தீயில் இறங்கும் ஆஞ்சநேயர்!

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை மெட்டலா கணவாய் என்ற இடத்தில் கோயில் கொண்டிருக்கும் ஆஞ்சநேயர், ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதக் கடைசியில் நடக்கும் தீமிதி விழாவின்போது தீயில் இறங்குகிறார்.

பட்டாக்கத்தி ஆஞ்சநேயர்!

ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் உள்ள சக்தி அனுமார், சுமார் 8 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்டு திகழ்கிறார். இவரது வலதுபுற இடையில் பிச்சுவாக்கத்தியும், கிரீடத்தின் பின்புறத்தில் ஒரு பெரிய பட்டாக்கத்தியும் வடிக்கப்பட்டிருக்கின்றன.

கண்டேன் தேவியை!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கு இப்படிப் பெயர் வரக் காரணம் ராமாயண காலத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் என்கிறார்கள். அதாவது, சீதையைக் கண்டு திரும்பிய அனுமான். ராமனிடம் கண்டேன் சீதையை (கண்டேன் தேவியை) என்று கூறிய இடமே இந்த கண்டதேவி என்றும், அதனாலேயே கண்டதேவி என்று இந்த ஊர் அழைக்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

அனுமனுக்கு முருகன் உருவாக்கிய தீர்த்தம்!

ஸ்ரீராம - ராவண யுத்தத்தின்போது மூர்ச்சையான லட்சுமணனைக் காப்பாற்ற ஜாம்பவானின் ஆலோசனைப்படி, சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரச் சென்ற அனுமன் சஞ்சீவி மலையுடனேயே திரும்பினார். அவ்வாறு திரும்பிவரும் வழியில் அவருக்குக் களைப்பும் தாகமும் ஏற்பட்டது. இதையறிந்த முருகப் பெருமான் வேலாயுதத்தைக் கொண்டு, அனுவாலி என்ற சிறிய குளம் ஒன்றை உருவாக்கி அனுமனின் துயர் தீர்த்தார். அந்த இடத்துக்கு அனுவாலினை என்று பெயர். அதாவது, அனுமார்வாலி என்ற பெயரே அனுவாலி என்று ஆகி, இப்போது அனுவாவி ஆக மருவியது. இவ்விடம் கோவையிலிருந்து சுமார் 15கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

திருவள்ளூர் அருகில், பட்டறை பெரும்புதூர் எனும் தலத்தில் சவுந்தர்ய நாராயணப் பெருமாள் கோயிலில், விநய பாவத்தில் காட்சி தருகிறார் அனுமன்.

கர்நாடக மாநிலம், உடுப்பி உத்திராதி மடத்தில்... வலது கையில் தம்புராவும், இடது கையில் ராமாயண நூலையும் ஏந்தியபடி அருளும் அனுமனைத் தரிசிக்கலாம்.

திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில் மூலவர் சன்னதிக்கு அருகில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவர். இந்த வெண்ணெய் வெயில் காலத்தில் உருகுவதில்லை; நீண்ட நாட்கள் கெட்டுப்போவதும் இல்லை என்கிறார்கள்!

கும்பகோணம் - ஸ்ரீராம ஸ்வாமி கோயிலில் வீணை வாசிக்கும் அனுமனைத் தரிசிக்கலாம்.

திருவையாறுக்கு அருகேயுள்ள புது அக்ரஹாரம் என்ற ஊரில், இடது கையில் புத்தகத்துடனும், வலது கையில் வீணையுடனும் தரிசனம் தருகிறார் அனுமன்.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் முன் மண்டபத்தூண் ஒன்றில் பன்னிரு கரங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார்.

 
மேலும் அனுமன் ஜெயந்தி! »
temple news
ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு சேவை செய்ய பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன. ... மேலும்
 
temple news
அனுமன் பெருமை: சுந்தரகாண்டம் படித்தால் வேண்டுதல்கள் யாவும் ஈடேறும் என்பர். ராமாயணத்தை எழுதிய வால்மீகி ... மேலும்
 
temple news
அனுமனாக அவதரித்த சிவபெருமான்: அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ... மேலும்
 
temple news
அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து ... மேலும்
 
temple news

நவமாருதி வழிபாடு! டிசம்பர் 23,2011

ஆஞ்சநேயரும் பிற தெய்வங்களைப் போலவே வடிவங்கள் பல எடுத்தவர் என்கின்றன புராணங்கள். வாயுமகன், வானர வீரன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar