அயோத்தி; வரும் 22ல் நடக்கவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேத்துக்காக அயோத்தி மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. அயோத்தி செல்லும் பக்தர்கள், தரிசிக்க வேண்டியது அங்குள்ள குழந்தை ராமரை மட்டு மல்ல; அருகிலேயே குடிகொண்டுள்ள பால ஹனுமனையும் தான். ராமர் கோவிலுக்கு மிக அருகிலேயே, நான்கு புறமும் கோட்டை போன்ற வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள மிக பழமையான கோவில் தான், ஹனுமன் கர்ஹி கோவில். தமிழில் ஹனுமன் இல்லம் என்று அர்த்தம்.
தாயின் மடியில்; இலங்கை போர் முடிவடைந்து, ராமர் அயோத்திக்கு திரும்பியபோது, அவருடன் வந்த ஹனுமன், ராமரையும், அயோத்தியையும் பாதுகாக்கும் வகையில், ஒரு உயரமான இடத்தில் குகையில் தங்கியிருந்த இடத்தில், இந்த கோவில் கட்டப்பட்டுள்ளதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.அயோத்தியில் உள்ள உயரமான இடமும் இது தான். கோவிலுக்கு சென்று ஹனுமனை தரிசிக்க, 76 படிகள் ஏற வேண்டும். அது ஒன்றும் மிக கடினமான ஏற்றம் அல்ல. கோவிலின் மையப் பகுதியில் பால ஹனுமன், தன் தாய் அஞ்சனையின் மடியில் அமர்ந்திருக்கும் சிறிய சிலை உள்ளது.
பயத்தை போக்கி, பலத்தை கொடுத்து, முடியாதவற்றை முடித்துக் காட்டும் கடவுள் ஹனுமன் என்பதால், தினந்தோறும் ஆயிரக்கக்காணக்கான பக்தர்கள், பல்வேறு வேண்டுதல்களுடன் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர். தேங்காய் உடைத்து, வழிபாடு நடக்கும் நடைமுறையை இங்கு பார்க்க முடியவில்லை. கோவிலுக்கு வரும் வழியிலேயே ஏராளமான இனிப்பு கடைகள் உள்ளன. அங்கிருந்து இனிப்பு வாங்கி வந்து, ஹனுமனுக்கு கொடுத்து, பக்தி பரவசத்துடன் வழிபட்டு செல்கின்றனர். இந்த இனிப்புகள், நெய் கலந்து தயாரிக்கப்பட்டவை. கோவிலின் சுவர்கள் முழுதும், ஹனுமன் சாலிசா எழுதப்பட்டுள்ளது. ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் இங்குள்ள ஹனுமனை தரிசித்து விட்டுத் தான், ராமரை தரிசிக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் இங்கு உள்ளது. அன்னிய படையெடுப்பின் போது, பலமுறை தாக்குதலுக்கு ஆளான கோவில் இது. இதை இடிப்பதற்கும் ஆக்கிரமிப்பாளர்கள் முயற்சித்தனர்.
பாதுகாப்பு: ஆனால், ராமரின் ஆசியால், இன்றும் கலங்கரை விளக்கம் போல் கம்பீரமாக காட்சி அளிக்கிறது இந்த கோவில். ராமாயண காலத்தில் மட்டுமல்ல; இந்த நவீன காலத்திலும், அயோத்திக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அரணாக விளங்குகிறார் ஹனுமன்.
சிறப்பு சேலை; நாட்டின் முக்கிய ஜவுளி மையமான குஜராத்தின் சூரத் நகரில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சிறப்பு சேலை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், கடவுள் ராமர் மற்றும் அயோத்தி ராமர் கோவிலின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சேலையை, சூரத்தைச் சேர்ந்த ஜவுளி தொழிலதிபர்கள் லலித் சர்மா, ராகேஷ் ஜெயின் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த சேலை, வரும் 22ம் தேதிக்குள் அயோத்தி ராமர் கோவிலுக்கு
அனுப்பப்பட உள்ளது.
பார்வையற்ற முஸ்லிம் பாடகருக்கு அழைப்பு; ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பிதழ்களை, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அனுப்பி வருகிறது.இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும்படி, ம.பி., யின் கந்த்வா மாவட்டத்தின் ஹப்லா பீப்லா என்ற கிராமத்தில் வசிக்கும், பக்தி பாடல்கள் பாடுபவரும், கவிஞருமான அக்பர் தாஜுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. பார்வையற்ற நபரான இவர், சிறு வயதில் இருந்தே கடவுள் ராமர் குறித்து பாடல்களை எழுதி பாடி வருகிறார். இது குறித்து அக்பர் தாஜ் கூறுகையில், வரும் 14ம் தேதி அயோத்திக்கு சென்று, கடவுள் ராமருக்காக நான் எழுதிய பாடல்கள் மற்றும் கவிதைகளை வாசிப்பேன், என்றார்.- நமது நிருபர் -