ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோவில், சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில், பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மூலவர் மீது, பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப்பட்டுள்ளதால், இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இக் கோவிலில், ஆண்டு தோறும், சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறுகின்றன. விழா தொடக்கமாக, நேற்று காலை 9 35 மணியளவில், மூலவர் மற்றும் கோவில் கொடிமரத்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, விழா துவக்கமாக கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டன. கொடியேற்றத்துடன் விழா துவங்கியதை தொடர்ந்து, தினமும் மாலையில், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் எட்டாம் நாளான ஆக. 29 ல், சித்தி புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து, மறுநாள் தேரோட்டம் நடைபெற்று, ஆகஸ்ட் 31 ல், நடைபெறும் சதுர்த்தி தீர்த்த வழியுடன் விழா நிறைவடைகிறது. கொடியேற்று விழாவில், ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகிகள், உப்பூர் முன்னாள் வி.ஏ.ஓ., கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.