டிசம்பர் 26,2024
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி பாவை நோன்பின் பதினோராம் நாளான இன்று பரமபதநாதர் சன்னதியிலுள்ள கண்ணாடி அறையில் கம்சவதம் திருக்கோலத்தில், கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஏற்ப ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் அருள்பாலித்தனர்.
கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது? என்பதே இன்றைய பாசுரத்தின் பொருள்.