மானாமதுரை; மானாமதுரையில் வீர அழகர் சித்திரை திருவிழாவின் போது பவனி வர புதிய பூப்பல்லக்கு பக்தர்கள் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரைப்போல மானாமதுரையிலும் சித்திரை திருவிழா பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் ஆலய சித்திரை திருவிழா வரும் மே 1ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 8ம் தேதி திருக்கல்யாணமும், 9ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. 11ம் தேதி வீர அழகரை எதிர்கொண்டு அழைத்து தியாக வினோத பெருமாள் கோயில் வந்த பின் நள்ளிரவு 12:00 மணிக்கு பூப்பல்லக்கில் வீர அழகர் பவனி வருவது வழக்கம், இதற்காக ஒவ்வொரு வருடமும் மூங்கிலால் ஆன பூப்பல்லக்கு தயாராகும், இந்தாண்டு பக்தர்கள் உதவியுடன் புதிய மரத்தால் பூப்பல்லக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு வருடமும் வீர அழகர் பூப்பல்லக்கில் பவனி வர இந்த பூப்பல்லக்கு பயன்படுத்தப்பட உள்ளது.