அவிநாசி; சேவூரில், 1,300 ஆண்டு பழமையான ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. கடந்த, 2002ல் கோவிலின் வசந்த மண்டபம் மேற்பகுதியிலுள்ள கற்கள் பெயர்ந்து விழுந்தது. மேலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால், கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் நடைபெற்றது. 2003ல், கும்பாபிஷேக திருப்பணி துவங்கப்பட்டது. அதில் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சுற்றுச்சுவர், மேல்நிலை நீர் தொட்டி, தீபஸ்தம்பம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டன. நிதி பற்றாக்குறையால் திருப்பணிகள் பாதியில் நின்றது. திருப்பணி தடையின்றி தொடர்ந்து நடைபெற பிரார்த்தனையாக, நேற்று சுதர்ஷன ஹோமம் நடந்தது. சொர்க்கவாசல் அமைத்து மதில் சுவர் கட்டுதல், முகப்பு தோரண வாயில் அமைத்து மதில் சுவர் கட்டுதல், கோவில் வளாகத்திற்குள் நடைபாதை கல் தளம் அமைத்தல், மூலவர் விமானம், மகாலட்சுமி விமானம், ஆண்டாள் விமானம், பஞ்சவர்ணம் தீட்டுதல், மகா மண்டபம் முன் மண்டபம் அமைத்தல், புதிய மடப்பள்ளி அமைத்தல் ஆகிய திருப்பணிகள் நடைபெற உள்ளன. திருப்பணியில், பக்தர்கள் பங்கேற்க வேண்டுமென, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். விவரங்களுக்கு, 89392 89270 என்ற எண்ணில் கோவில் செயல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.