திருவாடானை; திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாகம்பிரியாள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடக்கிறது. நேற்று காலை 8:45 மணிக்கு சிவாச்சாரியார்கள் மணிகண்டன் குருக்கள், வல்மீகநாத குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் ஆகியவற்றை கொண்டு அபிேஷகம் நடந்தது. தேவஸ்தான செயல் அலுவலர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் திருவெற்றியூர் கிராமத்தினர் கலந்து கொண்டனர். மே 5ல் திருக்கல்யாணம், 9 ல் தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரி நடைபெறும். விழா நாட்களில் பூதம், அன்னம், வெள்ளி ரிஷபம், நந்தி, சிம்மம் போன்ற வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.