அவிநாசி; ‘தகதகவென’ ஜொலிக்கும் கொடி மரம் அருகே பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, வேத விற்பன்னர்கள் நான்கு வேதங்களையும், சிவகண பூதவாத்தியம் முழங்க, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரப் பாடல் பெற்ற சிறப்பு பெற்றதும், தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என பெருமை பெற்றதுமான பெருங்கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் நடப்பாண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக விநாயகப்பெருமான், ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஸ்ரீகருணாம்பிகை அம்மன், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் கொடி மண்டபம் முன் எழுந்தருளினர். கொடியேற்ற கட்டளைதாரர்கள், சிவசூரியன், சந்திரன், நந்தி அச்சிட்ட கொடியினை, கோவில் பிரகார உலாவாக எடுத்து சென்று, கொடிக்கம்பத்தில் கட்டினர். சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை, கொடியேற்றம் நடந்தது. கொடியேற்ற விழா பூஜைகளை பெங்களூரூ வேதாகம மஹா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் நான்கு வேதங்களையும், ஓதுவா மூர்த்திகள், அவிநாசி தேவாரம் பாராயணம் செய்தனர்.
தொடர்ந்து, சிறப்பு வழிபாடு, வேத பாராயணத்துக்கு பின், கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில், செயல் அலுவலர் சபரீஷ்குமார், அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், அறங்காவலர்கள் பொன்னுசாமி, விஜயகுமார், கவிதாமணி ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவில் இன்றிரவு சூரிய சந்திர மண்டல காட்சி, நாளை அதிகார நந்தி கிளி பூதம், அன்னபட்சி வாகனம் மற்றும் புருஷாமிருக வாகன காட்சிகள், 4ம் தேதி கைலாச வாகனம் புஷ்ப பல்லாக்கு ஆகியன நடைபெறுகிறது. வரும் 5ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல், 6ம் தேதி கற்பக விருட்சம், வெள்ளை யானை வாகனம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடக்கிறது. வரும், 7ம் தேதி பஞ்ச மூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல், 8 மற்றும் 9ம் தேதி பெரிய தேர், 10ம் தேதி காலை அம்மன், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், கரி வரதராஜ பெருமாள் ஆகிய திருத்தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் தேதி பரிவேட்டை, 12ம் தேதி இரவு தெப்பத்தேர் உற்சவம், 13ம் தேதி நடராஜப் பெருமான் தரிசனம், 14ம் தேதி மஞ்சள் நீர், இரவு மயில் வாகன காட்சியுடன் தேர்த்திருவிழா நிறைவுபெறுகிறது.