துாத்துக்குடி; பிரசித்தி பெற்ற துாத்துக்குடி சிவன் கோவிலில், சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
துாத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்பாள், விநாயகர் மற்றும் முருகப்பெருமான் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் விநாயகர் மற்றும் முருகபெருமானும், பெரிய தேரில் பாகம்பிரியாள் மற்றும் சங்கரராமேஸ்வரரும் எழுந்தருளினர். கரகாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், புலி ஆட்டம், ஒயிலாட்டம், குதிரை, செண்டை மேளம், சிலம்பம், சுருள்வாள் வீச்சு உள்ளிட்ட கலைஞர்கள் அணிவகுக்க, தேரடி மாடனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேர் நிலையை அடைந்தது.