மேல்மலையனுாரில் சாலையில் துாங்கும் பக்தர்கள்; அடிப்படை வசதி இன்றி வேதனை



செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும், உள் கட்டமைப்பையையும் விரிவுபடுத்தாமல் இருப்பதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் மிக முக்கியமான ஆன்மீக தலமான மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் கடந்த 30 ஆண்டுகளில் விஸ்வரூப வளர்ச்சியை பெற்றுள்ளது. இங்கு நடந்து வரும் பாரம்பரிய தேர்திருவிழாவான மாசி பெருவிழாவிற்கும், ஆடி மாதத்தில் பொங்கல் வைத்து, குழந்தைகளுக்கு சிகை நீக்கி நேர்த்திகடன் செலுத்துவதற்காக பக்தர்கள் அதிகம் வந்தனர். இந்த நிலை மாறி தற்போது ஒவ்வொரு அமாவாசைக்கும் 1 முதல் 2 லட்சம் பக்தர்கள் வரை குவிகின்றனர். சாதாரண நாட்களில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் வருகையுடன் ஒப்பிடும் போது கோவில் வளாகத்திலும், ஊரிலும் இதுவரை செய்துள்ள அடிப்படை வசதிகள் 20 சதவீதத்தை கூட எட்ட வில்லை.


அமாவாசை உற்சவம்: இந்த கோவிலில் சித்திரை, மாசி மாதம் தவிர்த்து மற்ற மாதங்களில் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு துவங்கி 12 மணிக்கு உற்சவம் முடித்தது விடும். இதன் பிறகு ஒரு பகுதி பக்தர்கள் வெளியேறினாலும், ஒரு பகுதியினர் அதிகாலை வரை கோவில் வளாகத்தில் தங்கி இருந்து காலையில் செல்கின்றனர். மாசி, சித்திரை மாதத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் இங்கு தங்குகின்றனர்.


அடிப்படை வசதி; மேல்மலையனுார் கோவிலுக்கு வரும் பக்கதர்கள் மற்ற கோவிலை போல் சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விடுவதில்லை. அத்துடன் பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதும் பக்தர்களும், திருமண தடை, தம்பதிகளுக்குள் பிரச்சனை, கடன் பிரச்சனை, தீராத நோய் உள்ளவர்களும் இங்கே இரவு தங்கி இருந்து மறுநாள் செல்கின்றனர். அத்துடன் லட்சக்கணக்காண குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருப்பதால் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். எனவே பக்தர்கள் தங்குவதற்கு விடுதிகள், குடிநீர், கழிவறை வசதிகள் மற்ற கோவில்களை விட அதிகம் தேவை.


குவியும் பக்தர்கள்; ஆனால் இந்து தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் மற்ற கோவில்களுக்கு ஒதுக்கும் நிதியை விட மிக குறைந்த அளவிலேயே இந்த கோவிலுக்கு ஒதுக்குகின்றனர். நேற்று முன்தினம் இரவு நடந்த ஊஞ்சல் உற்சவத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்திருந்தனர்.


கழிவறை இல்லை; இவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த தற்காலிக பஸ் நிலையங்களில் கழிப்பறை வசதிகளை செய்ய வில்லை. பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையை கட்டும் பணி நடப்பதால் அங்கும் கழிவறை இல்லை. இரவு முழுவதம் பெண்கள் கும்மிருட்டில் புதர் மறைவையும், விவசாய நிலங்களுக்கும், ஏரி குளங்களுக்கும் செல்லும் அவல நிலை இருந்தது. சுத்திகரிக்கப்பட்ட குடிவீர் வசதி இன்றி பக்தர்கள் கடைகளில் தண்ணீர் பாட்டில் வங்கி பயன்படுத்தினர். அகலம் குறைவான சாலைகளில் ஆங்காங்கே வாகனங்கள் நின்றதால் வளத்தி, அவலுார்பேட்டை மார்க்கம் இருந்து வந்த பக்தர்கள் மூன்று முதல் நான்கு கி.மீ., துாரத்திற்கு விளக்கு வசதி இல்லாத சாலைகளில் நடந்து வந்தனர்.


சாலைகளில் தஞ்சம்: பக்தர்கள் தங்குவதற்காக கட்டியுள்ள கூடங்களில் பிச்சைகாரர்களும், சமூக விரோதிகளுமே தங்கி உள்ளனர். அதுவும் 500க்கும் குறைவான பக்தர்களே இதில் தங்க முடியும். நேற்று முன்தினம் இங்கு வந்திருத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்கு இடமின்றி மேல்மலையனுாரில் உள்ள குறுக்கு சாலைகளில் மண் தரையில் குழுந்தைகளுடன் துாங்கினர். நல்ல வேலையாக மழை இல்லாமல் இருந்ததால் பக்தர்கள் அதில் இருந்து தப்பினர்.


யாத்ரீகர் நிவாஸ் இல்லை: தமிழகத்தில் அதிகம் வருவாய் வரும் கோவில்களில் மேல்லையனுாரும் ஒன்று. பல கோடி வருவாயை அம்மனுக்கு காணிக்கையாக தரும் பக்தர்களுக்கு சில கோடிகளில் தங்கும் விடுதி கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு மனமின்றி இருப்பதால் பக்தர்களின் நிலை பரிதாபத்திற்கு உறியதாக உள்ளது. எனவே இந்து சமய அறநிலையத்துறை நிபுணர்களின் ஆலோசனையை பெற்று மேல்மலையனுாரில் பெரிய அளவிளான திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும், அத்துடன் ஸ்ரீரங்கம், திருப்பதி உள்ளிட்ட பெரிய கோவில்களில் உள்ளதை போல், கழிவறை, குளியல் அறை, கிளாக் ரூம் வசதியுடன் கூடிய யாத்ரீகர் நிவாஸ் அமைத்து அடைப்படை வசதிகளை செய்ய வேண்டும்.


எங்கே பஸ்; வழக்கமாக அமாவாசையன்று வள்ளலார் கோவில் அருகே இருந்து அனைத்து ஊர்களுக்கும் பக்தர்கள் பஸ் ஏறுவார்கள். ஆடி அமாவாசையினால் கூட்டம் அதிகம் இருந்ததால் போலீசார் ஊருக்குள் பஸ்களை அனுமதிக்க வில்லை. இது தெரியாத பக்தர்கள் வள்ளலார் கோவில் அருகே வந்து அங்கிருந்து எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பஸ் புறப்படும் என தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தனர். இதை தெரியப்படுத்த போக்குவரத்து துறையும், போலீசாரும் அறிவிப்பு பேனர்களை ஏற்பாடு செய்திருந்தால் பக்தர்கள் வீண் அலைச்சலுக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்