டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று இரவு மூடப்பட்டது. மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, மலையேற்றப் பாதை மூடப்பட்டது. ஒரு மலைப்பாதை இடிந்து விழுந்ததால், பொதுப்பணித் துறை கற்கலை அகற்றும் பணிகளைத் தொடங்கியது. பணிகள் நடந்து வரும் நிலையில், கேதார்நாத்திலிருந்து திரும்பும் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்புப் பணியாளர்கள் உதவி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கௌரிகுண்டிலிருந்து சன்னதி நோக்கிச் செல்லும் பயணிகள் பாதை முழுமையாக மீட்டெடுக்கப்படும் வரை நிறுத்தப்பட்டுள்ளனர். யாத்ரீகர்களுக்கு உதவ காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக ருத்ரபிரயாக் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்குதல், இடிபாடுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை விரைவான நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கின.