மானாமதுரை; மானாமதுரை அருகே சின்ன கண்ணனூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை அருகே உள்ள சின்ன கண்ணனூர் கிராமத்தில் புதிதாக அருள் தரும் ஐயப்பன் கோயில் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை பூர்ணாகுதி முடிவடைந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார் பாலாஜி சிவம் தலைமையிலான ஏராளமான சிவாச்சாரியார்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனை தொடர்ந்து ஐயப்பனுக்கு அபிஷேக,ஆராதனைகள் பூஜைகள் நடந்தது. கோயில் முன்பாக அன்னதானமும் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை அருள் தரும் ஐயப்பன் பக்தர்கள் குழு மற்றும் சின்ன கண்ணனூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.