தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலத்தில் பெரியநாயகி சமேத புராதனவனேஸ்வர் கோவில் அமைந்துள்ளது. கி.பி. 7-ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதற்கான வரலாற்று ஆவணங்களும், கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோவில் காசியை விட சக்தி மிகுந்ததாகவும், இத்தலம் சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும். அம்பாள் சன்னதியில் வலப்புறம் பழம் பெருமை வாய்ந்த விநாயகர் உள்ளார். இவரது செவியில் உள்ள துவாரங்களில், நமது வேண்டுதல்களை நினைத்து வைக்கப்படும் “பூ’க்களை, இவ்விநாயகர் உள்ளே இழுத்துக் கொண்டால் நமது வேண்டுதல் நிறைவேறும், நினைத்த காரியம் கைகூடும். பக்தர்களின் நம்பிக்கையாக இன்றும் பூவைக்கும் பழக்கம் இருக்கிறது.
இத்தகையை சிறப்பு மிக்க கோவிலில் கடந்த 2001ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு, கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்வதற்காக நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணி வேலைகளை துவங்க, கோவில் விமான பாலாலய வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக துறவிக்காடு, நரியங்காடு ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்களின் சார்பில் ஜமாத்தார்கள் பாலாலய விழாவில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவிலின் தலைமை சிவாச்சாரியார் சாமிநாதன் மற்றும் அனைத்து மண்டக படிதாரர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்கோவிலில் ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.